குஜராத்தில் ஆலை அமைக்க டெஸ்லா தயக்கம்? தமிழகத்தை குறி வைக்க வாய்ப்பு அதிகம்!
இந்தியாவிற்கு எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் வரவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் குஜராத் மாநிலத்தில் தான் அந்நிறுவனம் முதலீடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கான அறிவிப்புகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மாநாட்டில் அந்நிறுவனம் இடம்பெறாது என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டெஸ்லா நிறுவனம் தான். இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் தானியங்கிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் கார்கள் மீது அதிகமான விருப்பம் இருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இந்நிறுவனம் சிறப்பான வகையில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து மூன்றாவது உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதற்கான செய்தி வெளியான பின்பு பல ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இந்தியாவில் தங்கள் முதலீட்டை அதிகரிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றன. அப்படியாக டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என உள்ளே வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்காக மத்திய அரசிடம் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் வருவதற்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. அதற்கு மத்திய அரசு மற்ற நிறுவனங்களுக்கு எவ்வாறு சலுகை வழங்கப்படுமோ அதே போல தான் டெஸ்லா நிறுவனத்திற்கும் வழங்கப்படும் என்றும், கூடுதலாக எந்த சலுகைகளும் வழங்கப்படாது எனும் கூறியதாக தெரிகிறது.
தற்போது இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதி கோரி வருவதாக தெரிகிறது. அப்படி செய்ய வேண்டும் என்றால் 100% வரி செலுத்தினால் மட்டுமே இறக்குமதி செய்து செய்து விற்பனை செய்ய முடியும். அப்படி செய்தால் வாகனத்தின் விலை அதிகமாக இருக்கும்.
இந்த இறுக்குமதி வரிகளை குறைக்கும் படி டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே அதிகமான சலுகைகள் வழங்க முடியும் என பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தனது ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் பங்கேற்று தனது முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 10ம் தேதி துவங்கிய முதலீட்டாளர் மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் பங்கேற்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்காது என்றும் தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதில் இறுதி கட்ட முடிவுகளை எடுக்கவில்லை என்றும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் குஜராத்தில் நிறுவனம் செய்ய போகும் முதலீடு என்பது மாறும் என தெரிகிறது. குஜராத்தை விட வேறு மாநிலத்தில் தனது ஆலையை அமைக்கலாமா என டெஸ்லா நிறுவனம் யோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைக்க இடம் தேர்வு செய்து கொண்டிருந்தபோது தமிழ்நாடும் ஒரு முக்கிய ஆப்ஷனாக இருந்தது. தமிழகத்தில் ஆலை அமைத்தால் அந்நிறுவனம் தெற்காசிய நாடுகளுக்கு எளிதாக வாகனங்களை ஏற்றுமதி செய்யலாம் என்பதால் தமிழகத்தை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இதற்கிடையில் தெலங்கானா மாநிலமும் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அறிவித்தன.
இதுவரை குஜராத் மாநிலம் தான் இந்த நிறுவனத்தை தட்டிச் செல்லும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எந்த மாநிலத்தில் டெஸ்ட்லா நிறுவனம் தனது ஆலையை அமைக்கும் என்ற யோசனையை செய்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை தேர்வு செய்தால் டெஸ்லா நிறுவனம் தனது தொழிலை விரிவுபடுத்த வசதியாக இருக்கும்.