பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழா: எங்கு தெரியுமா?
தைப்பூசம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முருகப்பெருமான்தான். இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் வெகு விமரிசையாக பல்வேறு வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.
இப்படியிருக்க, திவ்யதேச பெருமாள் கோயில் ஒன்றில் தைப்பூசம் வைபவம் ஒன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகே உள்ள திருச்சேறை திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. இத்தல பெருமாளின் திருநாமம் ஸ்ரீ சாரநாத பெருமாள். தாயார் சார நாயகி.
இக்கோயில் மூலவர் சாரநாத பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என ஐந்து தேவியர்களுடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கு வலது புறம் மார்க்கண்டேரும், இடதுபுறம் காவிரி தாயும் அமர்ந்துள்ளனர். மார்கண்டேயர் முக்தி அடைந்த தலம் இது.
ஒரு சமயம் கங்கைக்கு இணையாக தனக்கும் பெருமை வேண்டும் எனக் கேட்டு காவிரித்தாய், சார புஷ்கரணியின் மேற்குக்கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்தை மெச்சிய பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பிறகு கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரித்தாய், ‘எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும்’ என வேண்டிக்கொள்ள பெருமாளும் அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்தார். கருவறையில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதைக் காணலாம்.