தைப்பூசம் 2024 : முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? பலன்கள் இதோ!

தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் முருகன் என்பது நம்பிக்கை.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.

முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு.

தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது மிகுந்த விசேஷசமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *