தக் ஃபையா இந்த ஆளு.. சொல்ற இடத்துல நில்லுங்க தம்பி.. சர்பராஸ் கானுக்கு சொல்லி கொடுத்த ரோகித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் தோளை பிடித்து ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் நிறுத்திய ரோகித் சர்மாவின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் கிராலி 79 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாளிலேயே இந்திய அணியின் ஆதிக்கம் தொடங்கியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சேட்டைகளை களத்தில் செய்துள்ளார். ஜியோ சினிமாஸ் செயலியில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகளை கண்காணிக்க அவருக்காக ஒரு பிரத்யேக கேமரா பின் தொடரும். இதனால் ரோகித் சர்மா களத்தில் என்ன செய்கிறார் என்பதை முழுமையாக ரசிகர்கள் வீட்டில் இருந்தே பார்க்க முடியும்.
அதில் இளம் வீரர் சர்பராஸ் கான் – ரோகித் சர்மா இடையிலான உறவு பிடிமானம் களத்திலும் அதிகரித்து வருகிறது. இளம் வீரரான சர்பராஸ் கானை ரோகித் சர்மா, ஜாலியாக கலாய்த்து தள்ளுகிறார். இளம் வீரர் என்பதால் சர்பராஸ் கான் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் நிறுத்தப்பட்டு வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் நின்றிருந்த இடத்தை மாற்ற நினைத்த ரோகித் சர்மா, அவரை தோளை பிடித்து இழுத்து க்ரீஸிற்கு அருகில் நிறுத்தினார்.
கிட்டத்தட்ட சொல்லும் இடத்தில் நில் என்று கோபமாகவும், அவரை கிண்டல் செய்தும் ரோகித் சர்மா செயல்பட்டார். அதேபோல் ஸ்லிப் திசையில் நின்ற ஜெய்ஸ்வாலுக்கும் ஃபீல்டிங் இடத்தை சரி செய்தார். ரோகித் சர்மாவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவை ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.