தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்தின் மகன்! குவியும் வாழ்த்து!

தளபதி விஜய்யை தொடர்ந்து, அவருடைய சித்தி மகனான விக்ராந்த்… தமிழ் சினிமாவில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கற்க கசடற’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் தோல்வியை தழுவியது. தமிழ் சினிமாவில் தன்னை ஒரு முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தி கொள்ள தற்போது வரை விக்ராந்த் போராடி வருகிறார்.
இதுவரை இவர் நடிப்பில் வெளியான நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த விக்ராந்த் சமீப காலமாக ஹீரோ என்பதை கடந்து, வலுவான குணச்சித்திர வேடங்களிலும், இரண்டாவது கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக விக்ராந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள, ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர்… விக்ராந்துக்கு அவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விக்ராந்த் நடிகை மானசா என்பவரை 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யஸ்வந்த் மற்றும் விபின் விநாயகர் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது விக்ராந்தின் மூத்த மகனான யஸ்வந்த் , 14 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரிவில் தேர்வாகி உள்ள தகவலை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விக்ராந்தின் மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்ராந்த்தும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் நன்கு கிரிக்கெட் விளையாட தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.