ஏர்டெல், ஜியோ புண்ணியத்தால் சீப்பான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கப்போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க..!
இந்தியா டெலிகாம் சேவை துறையில் 4ஜி மூலம் பெரும் புரட்சி 2016-17 காலக்கட்டத்தில் நடந்தது யாராலும் மறக்க முடியாது, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அறிமுகம் செய்து பல டெலிகாம் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 5ஜி சேவை புரட்சி மாறுபட்ட முறையில் வெடித்துள்ளது. 5ஜி சேவையில் லாபம் அதிகம் இருப்பதை டெலிகாம் நிறுவனங்கள் உணர்ந்துள்ளது, ஆனால் 5ஜி சேவையில் போதுமான வாடிக்கையாளர்கள் இல்லை, அதாவது 5ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இல்லை.
மலிவு விலை ஸ்மார்ட்போன்: இதனை சரி செய்ய 5ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு, அதாவது மக்களுக்கு மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வழங்க பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
இந்திய சந்தை: இந்தியா சந்தை எப்போது price sensitive சந்தை என்பதால், 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000/- க்கு கீழ் வரும்போது மட்டுமே மக்கள் அதிகளவில் 5ஜி போன்களை வாங்கி, 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏர்டெல் மற்றும் ஜியோவின் முயற்சிகள்: இந்த உண்மை நிலையை உணர்ந்த பார்தி ஏர்டெல் நிறுவனம், ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி-யின் தங்கச்சி பிராண்டான போகோ-வுடன் இணைந்து எக்ஸ்க்ளூசிவ் கூட்டமைப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த கூட்டணி மூலம், டேட்டா கட்டணத்துடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.8,799/- ஆகக் குறைத்துள்ளது. இதேபோல், வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடனும் இதுபோன்ற கூட்டமைப்புகளை ஏற்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்: ஏர்டெல் நிறுவனமே அதிரடியாக ஆஃப்ர் வழங்கும் போது முகேஷ் அம்பானியின் ஜியோ மட்டும் சும்மாவா இருக்கும், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் இணைந்து டேட்டா மற்றும் ஓடிடி சந்தாவுடன் இணைக்கப்பட்ட திட்டத்தை 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை அதிகரிப்பதற்காக இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனம் போகோ, ஒன்பிளஸ், ஷியோமி, ரியல்மி மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்காக கூட்டமைப்பு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை எந்தொரு நிறுவனத்துடனும் கூட்டணி வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
ஏர்டெல் நிறுவனத்தின் இத்திட்டம் பலன் அளித்தால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் அதிரடி ஆஃபர்களை வழங்க சாத்தியம் உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் தனது ஸ்மார்ட்போன் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை மொத்தமாக ஆஃபராக கொடுத்து ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொள்ள முடியும்.
ஏர்டெல் தற்போது 6.5 கோடி 5ஜி வாடிக்கையாளர்களையும், ஜியோ 9 கோடி 5ஜி வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது.