பும்ரா கொடுத்த அந்த அட்வைஸ்.. என் நம்பிக்கையை மொத்தமாக மாற்றிவிட்டது.. இந்திய இளம் வீரர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கொடுத்த அட்வைஸ் பற்றி இளம் வீரர் முகேஷ் குமார் மனம் திறந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் உமேஷ் யாதவ் கழற்றிவிடப்பட்டு, அவரது இடத்தில் இளம் வீரரான முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் சுற்றுப்பயணத்திலேயே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியிலும் முகேஷ் குமார் சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதனால் அவரது இடத்தை முகேஷ் குமார் நிரப்பி வருகிறார். பெங்கால் அணிக்காக ஆடிய முகேஷ் குமார், ரஞ்சி டிராபி போட்டிகளில் சீராக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளை முழுமையாக கற்று தேர்ந்தவர் என்றே சொல்லலாம். டெஸ்ட் கிரிக்கெட் மெய்டன் ஓவர்களை வீசுவது எவ்வளவு முக்கியம் என்பதை ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரை விடவும் நன்றாக அறிந்துள்ளார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் சில போட்டிகளில் முகேஷ் குமாருக்கு விளையாட நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் முகேஷ் குமார் பேசுகையில், ஜஸ்பிரித் பும்ரா எனக்கு ஒரேயொரு அட்வைஸ் தான் மீண்டும் மீண்டும் கூறுவார். நான் நன்றாக யார்க்கர் பந்துகளை வீசுவதாகவும், அதனை தொடர்ந்து செய்யுமாறும் அறிவுறுத்துவார். அவருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். அவர் எந்த தருணத்திலும் எனக்கு ஆலோசனை வழங்க தயாராக இருப்பார்.
பெங்கால் அணியிலும், இந்திய அணியிலும் எனது ரோல் ஒன்று தான். பெங்கால் அணிக்காக ஆடும் போது ஆகாஷ் தீப் மற்றும் இஷான் போரெல் உடன் ஆலோசனை செய்வேன். யார் அட்டாக் செய்வது, யார் மெய்டன் ஓவர் வீசி அழுத்தம் கொடுப்பது என்று திட்டமிடுவோம். அதேதான் இந்திய அணியிலும். தென்னாப்பிரிக்கா மண்ணில் பும்ரா என்னிடம் தொடர்ந்து டாட் பால்களை வீசுமாறு அறிவுறுத்தினார். அதனை சரியாக செய்தேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.