தோனி கொடுத்த அந்த அட்வைஸ்.. டிவியை பார்த்த போது காத்திருந்த சர்ப்ரைஸ்.. இந்திய இளம் வீரர் பேட்டி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டார். முதன்மை விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்திய ஏ அணிக்காக மிகச்சிறந்த பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்த 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் நிச்சயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக துருவ் ஜுரெல் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு தேர்வானது குறித்து செய்தியாளர்களை சந்தித்து துருவ் ஜுரெல் பேசுகையில், சிறுவயதில் இருந்தே தோனியின் தீவிர ரசிகன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தோனியிடம், களமிறங்கும் போது உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்? என்று கேட்டேன்.
அதற்கு தோனி, பந்தை பார்த்து பேட்டில் அடிக்க வேண்டும் என்பது தான் என் மனதில் இருக்கும். எப்போதும் பெரிதாக எந்த சிந்தனையையும் மனதில் வைத்து கொள்ளக் கூடாது. வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அது எப்போதும் இருக்கும். ஆனால் நாம் விளையாடப் போவதை காட்சிகளாக கற்பனை செய்து பார்க்க வேண்டும்.