அந்த பையனுக்கு பயமே இல்லை.. சிக்ஸ், பவுண்டரி விளாசி இரட்டை சதம்.. சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனையை படத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர்.

இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் அட்டாக்கை தொடங்கினார். இதையடுத்து அஸ்வின் சில பவுண்டரிகளை அடிக்க, மறுபக்கம் ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அதிரடியாக ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு ஜெய்ஸ்வாலின் தலையில் விழுந்தது. பின்னர் சோயப் பஷீர் வீசிய அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசிய ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக கங்குலி, வினோத் காம்ப்ளி, கவுதம் கம்பீர் ஆகியோர் இரட்டை சதம் விளாசியுள்ளனர். அதேபோல் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் வினோத் காம்ப்ளி 21 வயது மற்றும் 35 நாட்களில் இரட்டை சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு பின் சுனில் கவாஸ்கர் 21 வயது மற்றும் 283 நாட்களில் இரட்டை சதம் விளாசி 2வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு பின் ஜெய்ஸ்வால் 22 வயது 37 நாட்களில் இரட்டை சதத்தை விளாசியுள்ளார். 190 ரன்களில் இருந்த போது கொஞ்சம் கூட பயமின்றி சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசி இரட்டை சதம் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *