அந்த பையன் சாதாரண வீரரல்ல.. ”அட்டாக்” செய்ய முடிவு செய்து களமிறங்குகிறார்.. ரோகித் சர்மா பாராட்டு!
இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதாரண வீரர் அல்ல என்றும், சவால்களை அன்புடன் ஏற்று கொள்ளும் பக்குவம் அவரிடம் இருப்பதாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. வெறும் இரண்டரை நாட்களில் இங்கிலாந்து அணியை 2 முறை ஆல் அவுட் செய்து இந்திய அணி தனது பலத்தை நிரூபித்துள்ளது. 3வது நாள் ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத போது, பும்ராவின் தலைமைக்கு கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறைக்கு இந்திய அணி முடிவுரை எழுதியுள்ளது. விராட் கோலி, முகமது ஷமி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இந்த போட்டியை போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், நாம் திட்டமிட்ட அனைத்து விஷயங்களும் களத்தில் நடக்க வேண்டும். இந்திய அணியில் யாரும் நிரந்திரமாக விளையாட போவதில்லை. வீரர்கள் வருவதும், போவதும் சாதாரணம் தான். இளம் வீரர்கள், அறிமுக வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.
ஆனால் அவர்கள் அனைவரும் அதிகளவிலான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அதிலும் அழுத்தம் நிறைந்த சூழல்களில் இளம் வீரர்கள் அனைவரையும் அசத்திவிட்டார்கள். இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் காரணம். அதேபோல் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல ரன்கள் சேர்ப்பதோ, சதங்கள் விளாசுவதாலோ நடக்காது. அதற்கு 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.
பவுலர்கள் அனைவரும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள். அதுதான் மகிழ்ச்சியாக உள்ளது. குல்தீப் யாதவுடன் எப்போதும் ஆலோசித்து வருவோம். அவரிடம் திறமை உள்ளது. காயத்திற்கு பின் என்சிஏவில் அதிக உழைப்பை போட்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய போது, அசால்ட்டாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் குல்தீப் யாதவின் பேட்டிங்கை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடக்க செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். இந்த இடத்தில் அவர் இருப்பது மகிழ்ச்சி. பவுலர்களை முடிவு செய்து அட்டாக் செய்வது எளிதான விஷயமல்ல. ஜெய்ஸ்வாலிடம் அப்படியான திறமை உள்ளது. அவர்களை போன்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பது முக்கியம். நிச்சயம் அடுத்தடுத்த சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது. அவரும் சாதாரண வீரர் அல்ல. சவால்களை அன்புடன் ஏற்றுக் கொள்பவர். அவருக்கு இது சிறந்த தொடராக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.