உலகிலேயே காரமான மிளகாயை வெறும் 30 நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கர்!
உலகளவில் மிகவும் காரமான மிளகாயாக கருதப்படும் பூட் ஜோலக்கியாவை (Bhut Jolokiya) வெறும் 30 நொடிகளில் சாப்பிட்டு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த கிரேக் ஃபோஸ்டர். இதன் மூலம் இன்னொரு முறை தனது பெயரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதித்து, தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். எந்தவித சிரமும் இல்லாமல் காரமான மிளகாயை ஃபோஸ்டர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் அமைப்பு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவில், பூட் ஜோலோகியா மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சாப்பிடுகிறார் ஃபோஸ்டர். ஏதோ இனிப்பு மிட்டாயை ருசித்து சாப்பிடுவது போல் நிதானமாகவும், எந்தவித படபடப்பும் இல்லாமல் அவர் மிளகாய் சாப்பிட்டதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. கடைசியில் போட்டியில் வெற்றி பெற்றதும் பெருமிதத்தோடு தனது நாக்கை வெளியே நீட்டி பார்வையாளர்களிடம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். வெறும் 30.01 நொடிகளில் 10 பூட் ஜோலோகியா மிளகாயை சாப்பிட்டு சாதனை புத்தகத்தில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதேப்போல் பலமுறை காரமான மிளகாய் சாப்பிட்டு பல சாதனைகளை படைத்துள்ளார் ஃபோஸ்டர்.
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 8.72 நொடிகளில் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய் சாப்பிட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஃபோஸ்டர். அதேப்போல் 2021, நவம்பர் மாதமும் ஒரு நிமிடத்தில் அதிக பூட் ஜோலோகியா மிளகாயை சாப்பிட்டவர் என்ற சாதனையை படைத்தார். 2017-ம் ஆண்டில் ஒரே நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.
காரமான உணவுகளின் மீது ஃபோஸ்டருக்கு இருந்த ஆர்வமே அவரை இவ்வுளவு சாதனைகளை படைக்க காரணமாக இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிலும் பல வகையான மிளகாய்களை சொந்தமாக விளைவித்து வருகிறார் ஃபோஸ்டர். சுமார் பத்து வருடத்திற்கும் மேலாக காரமான உணவுகளை சாப்பிட்டால் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு தனது உடலை பக்குவப்படுத்தி வைத்துள்ளார். இதனால்தான் அவரால் உலகின் காரமான மிளகாய்களை கூட சர்வ சாதாரணமாக சாப்பிட முடிகிறது.
இது எனக்கு நானே அளித்துக்கொண்ட சவால். என்னால் எவ்வளவு காரமான மிளகாய் சாப்பிட முடிகிறது மற்றும் இதுபோன்ற காரமான மிளகாய்கள் மீது நான் எவ்வளவு காதல் வைத்துள்ளேன் என்பதை பார்க்கவே இந்த சாதனையை நிகழ்த்தினேன். எனக்கு மிளகாய் என்றால் அவ்வுளவு பிடிக்கும். அதிக காரமுள்ள மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் சந்தோஷம் மற்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே என்னுடைய லட்சியம். எனது தனிப்பட்ட சாதனைகளை அதிகரித்துக்கொள்ளவே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறேன் எனக் கூறுகிறார் கிரேக் ஃபோஸ்டர்.
பொதுவாக மிளகாயின் காரத்தன்மை Scoville Heat Units (SHU). என்ற அளவீடுகளில் கணக்கிடப்படுகிறது. சாதாரண ஜெலபினோ மிளகாயின் காரம் 5,000 SHU ஆகும். அதுவே கரோலினா ரீப்பர் மிளகாய் 1.64 மில்லியன் SHU காரத்தன்மையை கொண்டுள்ளது. கடந்த வருடம் இதை Pepper X என்ற மிளகாய் தோற்கடித்தது. இதன் காரத்தன்மை 2.69 மில்லியன் SHU ஆகும். கோஸ்ட் பெப்பர் என அழைக்கப்படும் பூட் ஜோலோகியா ஏறக்குறைய ஒரு மில்லியன் SHU என்ற அளவில் உள்ளது.