7 ஆண்டுகால மர்மத்துக்கு கிடைத்த விடை; வங்கக்கடலின் 3.5 கி.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்கள்…!

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி  அந்தமானின் போர்ட் பிளேயர் தீவுக்கு AN-32 என்ற விமானம் புறப்பட்டது.

விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், 2 ராணுவ வீரர்கள், ஒரு கடற்படை வீரர், ஒரு கப்பல் மாலுமி, 8 கப்பல் படை ஊழியர்கள் என மொத்தம் 29 பேர் பயணித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே செம்பூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற கடலோர பாதுகாப்பு படை வீரரும் சென்றார்.

தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில் இந்த சரக்கு விமானம் வங்கக் கடலில் திடீரென மாயமானது. விமானம் எங்கு சென்றது, என்ன ஆனது என்பது தெரியாத நிலையில், தகவல் தொடர்பை இழந்தபோது அந்த விமானம் சென்னைக்கு கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் வங்களா விரிகுடா கடலுக்கு மேல் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனால்,  அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி,  சுமார் ஒரு மாத காலம் விமானப்படை மற்றும் கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியில் டார்னியர் விமானங்கள், கடற்படையின் நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம், 13 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டன.

ஆனால், விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்படாததால், அதில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினருக்கு விமானப்படை தகவல் அனுப்பியது. இதனிடையே, சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின், ஆழ்கடலில் ஆய்வு செய்யும் வாகனம் மூலம் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், சென்னையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில், வங்கக் கடலில் சுமார் மூன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் புகைப்படங்களை AN-32 விமானத்தோடு ஒப்பிட்டபோது, ஏழரை ஆண்டுகால மர்மத்திற்கு விடை கிடைத்தது.

 

இந்தியாவில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், கடல்வளம், கடலுக்கு அடியில் உள்ள கனிமவளம், கடலுக்குள் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஏயூவி (Autonomous Underwater Vehicle) எனும் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. இந்த இயந்திரம் கடலுக்கடியில் என்ன இருக்கிறது? என்பதை தேடும் கருவியாகும். இதில் மல்டி பீம் சோனார், கடலுக்கடியில் இருப்பதை புகைப்பிடிக்கும் கேமரா உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ஏயூவி இயந்திரம் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான்,  ஏஎன் 32 ரக விமானத்தின் பாகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக விபத்துக்குள்ளான விமானத்தில் கருப்பு பெட்டி என்பதில் தான் விமானிகள் பேசும் உரையாடல்கள் குறித்த விபரங்கள் இடம்பெறும். கருப்பு பெட்டி கிடைத்தால் கடைசி நிமிடத்தில் விமானிகள் என்ன கூறினார்கள்? விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்த முக்கிய தகவல் கிடைக்கும்.  இது குறித்த ஆய்வு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *