கப்பல்கள் மீதான தாக்குதல் இந்தியாவுக்கு வைத்த செக்கா?
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தங்கள் மண்ணுரிமைக்காக கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் குதித்து இஸ்ரேலிய மக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்துச்சென்றனர். இதற்காக இஸ்ரேல் அடுத்த நாளே பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள கட்டடங்கள் எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழலில் ஹமாஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படை. கடந்த மாதம் துருக்கியில் இருந்து, இந்தியா நோக்கி வந்த இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பலை ஹவுதி படை கடத்திய போது உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தன.
வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரும் வார்டன்னா அடிப்போம் என்பதைப்போல, இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இஸ்ரேல் கொடியுடன் வரும் அனைத்து கப்பல்களும் குறிவைக்கப்படும் எனவும் ஹவுதி படை எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் நார்வே நாட்டுக் கொடியுடன், அந்த நாட்டுக்கு சொந்தமான ரசாயனம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
இதேபோல் கபோன் நாட்டுக்குச் சொந்தமான இந்திய கொடியுடன் பறந்த எம்வி சாய்பாபா கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. எனினும் இந்த தாக்குதல்களில்யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் இருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல் போக்குவரத்துகளை முடக்குவதன் மூலம், அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் தடையை ஏற்படுத்தலாம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கருதுவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, டென்மார்க் நாட்டை சேர்ந்த Maersk போன்ற நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியாக பயணிப்பதை நிறுத்திக் கொண்டன. மேலும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும் தன் பயணத்தை மாற்றிக் கொண்டது. இதனை அடுத்து, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் திட்டத்தை அமெரிக்கா அறிவித்தத அதன்படி பிரிட்டன், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்ட சர்வதேச கடற்படை உருவானது.
ஆனால், சர்வதேச படையில் இருந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதாக அறிவித்தது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகளை முடக்கும் திட்டமா? அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்தியா மேற்கொள்ளும் வணிகப் பாதை திட்டத்தை முறியடிக்கும் நடவடிக்கையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பாவை இணைக்கும் கடல் வழி போக்குவரத்தை, கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் தொடங்கி விட்டது. ஆகையால் இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா இணைக்கும் கடல் வழி போக்குவரத்தை முடக்கும் நாடுகளின் சதித் திட்டமாக இருக்கலாம் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெரோஸ் குற்றஞ்சாட்டினார். அதன் அடிப்படையில் பார்க்கையில், ஹவுதி தாக்குதலுக்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்குமோ என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.