பெரிய “டிரான்ஸ்பர்”.. அதுவிடுங்க, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு? சூடுபிடிக்குது தேர்தல் பிஸி
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கடந்த எம்பி தேர்தலை நடத்தியதை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை கணக்கிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. இந்த அடிப்படையில்தான் தேர்தல் தேதி அட்டவணையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு மாதத்தில், இந்த லிஸ்ட் வெளியாகலாம் என்றும், அட்டவணை வெளியிடப்பட்டால்தான், ஒவ்வொரு மாநிலத்தில் எந்த தேதியில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்க போகிறது என்பது தெரிய வரும். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்கள் அல்லது பெரிய பெரிய மாநிலங்களில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்..
ஒரே கட்டம்: ஆனால், வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில், பதற்றமோ, கலவரமோ கிடையாது.. 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலையே எப்போதும் காணப்படும். ஒவ்வொரு தேர்தலும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடந்து முடியும்.. எனவே, வழக்கம்போல, இந்த முறையும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த முடிவாகி உள்ளதாக சொல்கிறார்கள். இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால்தான் இதுகுறித்து தெரியும்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அரசு துறை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
டிரான்ஸ்பர்: தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டால், தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம்.
வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம்.
3 வருடங்கள்: ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.