மிகப் பெரிய தவறு.. ஐபிஎல் அணி எடுத்த முடிவால் ஆடிப் போன அஸ்வின்.. கேப்டன்சியில் சொதப்பல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முடிவால் தான் அதிர்ந்து போனதாக கூறி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். வெற்றிகளை குவித்து இரண்டு கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டனை நீக்கி விட்டு, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாக நியமித்தது குறித்து அஸ்வின் கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடி கொடுத்து வாங்கியது. அப்போது பலரும் அத்தனை தொகை கொடுத்தது வீண் என விமர்சனம் செய்தனர்.
ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கிரமை நீக்கி விட்டு, பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாக நியமிக்கவே இத்தனை தொகை கொடுத்து அந்த அணி வாங்கி இருக்கிறது என பலரும் கூறினர். அதே போல, 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால், ஐடன் மார்கிரமை மோசமான டி20 கேப்டன் என சொல்லி விட முடியாது. 2023 ஐபிஎல் தொடரில் அவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழாவது இடம் பிடித்தது உண்மை தான். ஆனால், தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இதே சன்ரைசர்ஸ் குழுமத்தின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக இதே மார்கிரம் இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
சில மாதங்கள் முன்பு நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இரண்டாவது முறையாக கோப்பை வென்று கொடுத்த கேப்டன் மார்கிரமை நீக்கி விட்டு டி20 அணியின் கேப்டனாக சரியாக செயல்படாத பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம்.
இது குறித்து பேசிய அஸ்வின், “தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு முறை கோப்பை வென்று இருக்கிறது. அதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். பாட் கம்மின்ஸ்-ஐ அவர்கள் கேப்டனாக நியமித்து இருக்கிறார்கள். அவர்கள் மார்கிரமை கேப்டனாக வைத்தே ஆடி இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது” எனக் கூறி இருக்கிறார்.