டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பிரம்மாண்ட விக்கெட் சாதனை.. ஜேம்ஸ் ஆண்டர்சன் மைல்கல் ரெக்கார்டு
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்தி புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்கள்), ஷேன் வார்னே (708 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்து 700 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும், வேகப் பந்துவீச்சாளர்களில் முதல் நபராக 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட்டு இருக்கிறார்.
2003ஆம் ஆண்டு மே மாதம் தன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருந்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 21 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் அவர் 187 போட்டிகளில் ஆடி 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட்டு இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது இந்த மைல்கல் சாதனையை படைத்தார். வேகப் பந்துவீச்சாளர்களில் ஸ்டூவர்ட் பிராடு 604 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு முன்பே கிரிக்கெட் ஆடத் துவங்கி, அவர் ஓய்வு பெற்ற பின்னரும் விளையாடி வரும் ஆண்டர்சன் தற்போது 700 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் 9 விக்கெட்கள வீழ்த்தும் பட்சத்தில் ஷேன் வார்னே சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார் ஆண்டர்சன்.