கேரளாவில் கட்சியை கபளீகரம் செய்த பாஜக! 7 முறை எம்எல்ஏ பிசி ஜார்ஜின் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்தது!
திருவனந்தபுரம்: கேரளாவில் 7 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற பிசி ஜார்ஜின் கேரள ஜனபக்ஷம் கட்சி பாஜகவுடன் இணைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர் வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் கேரள ஜனபக்ஷம் கட்சியை பாஜக இணைத்துள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் பிசி ஜார்ஜ். காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த பிசி ஜார்ஜ் 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கேரளா காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இணைந்தார். பின்னர் கேரள காங்கிரஸ் (மதச்சார்பற்றது) என்ற கட்சி உருவானது. இக்கட்சி இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியில் இணைந்திருந்தது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் காங்கிரஸ் ஜனநாயக முன்னணியில் இணைந்தது. பின்னர் கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியுடன் இணைந்தது. கேரள காங்கிரஸ்( மதச்சார்பற்றது) கட்சியில் இருந்து பிசி ஜார்ஜ் வெளியேற்றப்பட 2019-ல் கேரள ஜனபக்ஷம் கட்சியை தொடங்கினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கேரள ஜனபக்ஷம் கட்சி இடம் பெற்றிருந்தது. கேரளாவின் பூஞ்சார் சட்டசபை தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவர் பிசி ஜார்ஜ். 2021 சட்டசபை தேர்தலில் பூஞ்சார் தொகுதியில் பிசி ஜார்ஜ் தோல்வியைத் தழுவினார்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கடைசியாக பாஜகவிலேயே ஐக்கியமாகவும் பிசி ஜார்ஜ் முடிவெடுத்து இன்று டெல்லிக்குப் போய் இணைந்துவிட்டார். லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்ற கணக்குடன் பிசி ஜார்ஜ் கட்சியை பாஜக இணைத்துக் கொண்டிருக்கிறதாம்.