அகதிகள் முகாம் மீது விழுந்த குண்டு.. அப்படியே சிதறிய 70 உடல்கள்! காசாவில் மீண்டும் ஷாக்
கடந்த சில நாட்களாக பாலஸ்தீனம் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 70 பேரை வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன ‘சுதந்திர பாலஸ்தீனம்’ எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.
தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 7,000 குழந்தைகள் உட்பட 20,400 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் பேச்சுவார்த்தையை உலக நாடுகள் தீவிரப்படுத்தின. கத்தார் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது. ஐநா சபையில் சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பின. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை/சிறை கைதிகளை விடுக்க ஒப்புக்கொண்டன.
அதன்படி இஸ்ரேலும், ஹமாஸும் தங்கள் வசம் இருந்த கைதிகளை விடுவித்தனர். இதனால் சில நாட்கள் மட்டுமே போர் நிறுத்தம் நீடித்தது. கைதிகள் பரிமாற்றம் முடிந்த நிலையில், போர் தொடர்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனையடுத்து நேற்று மத்திய காசாவில் உள்ள ‘மகாசி’ பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 12 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா கூறியுள்ளார். இஸ்ரேல் தரப்பில், “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்க சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிபூண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளது.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசு கிறிஸ்து பிறந்ததாக சொல்லப்படும் பெத்லகேமில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.