700 ரூபாய்க்கு ‘தார்’ காரை கேட்ட சிறுவன்.. அசந்து போன ஆனந்த் மகிந்திரா.. கொடுத்த பதில்தான் ஹைலைட்டே
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. வாகன உற்பத்தி முதல் டெக் கம்பெனிகள் வரை இந்தியாவில் தொழில் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வரும் மகிந்திரே & மகேந்திரா குழுமத்தின் தலைவராக ஆனந்த மகேந்திரா இருக்கிறார். உலக அளவில் முன்னணியில் வகிக்கும் நிறுவனங்களின் தலைவராக இருந்தாலும் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர்.
குறிப்பாக எக்ஸ் தளத்தில் தனக்கு பிடித்த துணுக்குகள், தன்னம்பிக்கை கதைகள், எளிய பின்னணியில் இருந்து சாதித்த நபர்கள் குறித்த விவரங்கள் என தான் கண்டு கேட்டு வியந்த விஷயங்கள் குறித்து தனது சமூக வலைத்தள பகிர்ந்து வருகிறார். ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும் . ஆனந்த் மகிந்திராவிற்கு எக்ஸ் தளத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே என்று கூட சொல்லலாம்.
700 ரூபாய்க்கு கிடைக்குமா?: அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசப்படும் ஒன்றாக மாறிவிடும். ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாலோ செய்து வருகிறார்கள். ஆனந்த மகிந்திரா இன்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் ஒரு வீடியோவும் அந்த வீடியோவோடு அவர் பதிவிட்டிருகும் கருத்தும் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது, சிறுவன் ஒருவன் மகிந்திரா ‘தார்’ கார் 700 ரூபாய்க்கு கிடைக்குமா? என தனது தந்தையுடன் உரையாடும் வீடியோவைத்தான் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருக்கிறார். மேலும் இந்த வீடியோவோடு ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருக்கும் பதிவில், எனது நண்பர் சூனி தரபோரேவாலா இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். இந்த சிறுவனின் கேள்வி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒருநாள் உண்மையாகும்: எனவே இன்ஸ்டாவில் சிறுவனின் பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். தற்போது சீக்கு (சிறுவனின் பெயர்) வின் வீடியோ எனக்கு பிடித்துள்ளது. ஆனால், ஒரே பிரச்சினை என்னவென்றால் 700 ரூபாய்க்கு மகிந்திரா தார் காரை விற்க வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் ரொம்ப சீக்கிரமாகவே நாங்கள் திவாலாகிவிடுவோம்” என்றார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாக கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “இந்த சிறுவன் கூறுவது ஒருநாள் உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எனக்கு ஒரு காரும் எனது மனைவிக்கு ஒரு காரும் வாங்கிவிடுவேன் என பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து: மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த சிறுவனை மகிந்திரா தார் மற்றும் எக்ஸ் யூ.வி 700 காருக்கு பிராண்ட் அம்பாசிடராக நியமித்து விடுவது பற்றி பரிசீலனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், பல இளைஞர்களின் கனவு காராக வலம் வரும் மகிந்திரா தார் காரை 700 ரூபாய்க்கு கேட்டு அனைவரது மனதையும் இந்த சிறுவன் கவர்ந்து விட்டாரே என்று கூறியுள்ளார். மகிந்திரா நிறுவனத்தின் ‘தார்’ மாடல் கார் சென்னையில் தோராயமாக ரூ.10 லட்சத்தில் இருந்து 16 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.