பெற்றோர் எதிர்ப்பை தாண்டி துவங்கிய பிஸ்னஸ்.. இன்று கோடிகளை கொட்டுகிறது..!!
எத்தனை பேர் உங்களுடைய மாறுபட்ட வாழ்க்கை முடிவுகள் மற்றும் தொழில் தேர்வுகளுக்குப் பெற்றோரின் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறோம்..? 100க்கு 90 முறை பெற்றோர் ஏன் இந்த வேண்டாத வேலை, தவறான முடிவு, இது வொர்க் அவுட் ஆகாது என்று தான் பதில் வரும்.
இது அவர்கள் நம்மீது வைத்திருக்கும் மிகப்பெரிய அக்கறையின் வெளிப்பாடு தான், ஆனால் வாழ்க்கையில் வேகமாக வளர வேண்டுமாயின் சரியான திறன், புரிதலோடு கட்டாயம் புதிய அல்லது மாறுபட்ட முயற்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இன்று வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் 100ல் 99 பேர் அவர்களின் குடும்பத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத தொழிலில் தான் பெரும் வெற்றியைக் கண்டு உள்ளனர். இப்படியொரு வெற்றியைத் தான் அங்கூர் ஜெயின் கண்டுள்ளார்.
BIRA 91: உலகளவில் விரும்பப்படும் இந்திய கிராஃப்ட் பீர் பிராண்டான பீரா 91 (BIRA 91) நிறுவி பெரும் வெற்றியைக் கண்ட தொழிலதிபர் தான் அங்கூர் ஜெயின். அங்கூர் ஜெயின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
அமெரிக்கா கனவு: படிப்பை முடித்த உடன் நியூயார்க்கில் ஹெல்த்கேர் ரெவின்யூ மேனேஜ்மென்ட்டில் பிரிவில் தனது முதல் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு குறுகிய காலம் மோட்டோரோலா நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2007 இல் வெளியிடப்படாத ஹெல்த்கேர் நெட்வொர்க்கிற்கு விற்கப்பட்டது.
இந்தியா பயணம்: அதே ஆண்டே இந்தியாவுக்கு வந்த அங்கூர் ஜெயின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் வேலையில் சேர்ந்தார். ஆனால் ஒரு வருடத்திலேயே அந்த வேலையை விட்டுவிட்டார்.
பீர் இறக்குமதி: 2008 ஆம் ஆண்டில், அங்கூர் 20-30 வகையான பீர்களை இறக்குமதி செய்தார். இதை இளைஞர்களுக்குக் கொடுத்து அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொண்டார். ஆரம்பத்தில், இந்தியாவில் கிராப்ட் பீர் ஐடியாவை முதலீட்டாளர்களிடம் நம்பவைத்து சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டார் அங்கூர் ஜெயின்.
BIRA 91 அறிமுகம்: இந்த நிலையில் தான் Bira 91 ஆனது 2015 இல் B9 Beverages மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்திலேயே பெரு நகரங்களில் அதிகப்படியான மக்களை கவர்ந்தது, புதிய பீர் நிறுவனத்திற்கு இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.
ஆதிக்கம்: காரணம் இந்தியாவில் முதல் முறையாக இப்படியொரு ஐடியா கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு பீர் தயாரிப்பிலும் விற்பனையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தது தான் இதற்கு முக்கியமான காரணம்.
முக்கிய பிரச்சனை: கூடுதலாக, இந்தியாவில் மதுபானங்களைப் பற்றி ஊடகங்களில் விளம்பரம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதனால் மார்கெட்டிங் செய்வதிலும் பிரச்சனை இருந்தது. இதனால் bira 91 முதலில் பப்கள் மற்றும் உணவகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தனித்துவமான லோகோ: 91 என்பது இந்தியாவின் நாட்டுக் குறியீடு, அதேபோல் இதன் லோகோவில் B என்ற எழுத்து தலைகீழாக இருக்கும், குரங்கு சின்னம் என முற்றிலும் மாறுபட்ட டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டது.
340 மில்லியன் டாலர் முதலீடு: பீரா91 இதுவரையில் 18 சுற்றுகளில் மொத்தம் 340 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளது. அதன் முதல் நிதிச் சுற்று அக்டோபர் 27, 2015 அன்று நடந்தது. அதன் சமீபத்திய நிதிச் சுற்று மார்ச் 10, 2023 அன்று 10 மில்லியன் டாலர் அளவில் இருந்தது. Sequoia Capital அதன் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளர் ஆகும்.
824 கோடி: பீரா91 தற்போது சுமார் 18 நாடுகளில், 550 நகரங்களில், 31000 விற்பனை நிலையங்களில் விற்கப்பட்டு வருகிறது. Bira 91 இன் செயல்பாடுகளின் வருவாய் 2022 ஆம் நிதியாண்டில் 719 கோடி ரூபாயில் இருந்து 2023 ஆம் நிதியாண்டில் 824 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.