மாசம் 1.78 லட்சம் கோடி கடன் வாங்கிய மத்திய அரசு.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவுக்கு வேகமாக உயர்கிறதோ, அதே அளவுக்கு நாட்டின் கடனும் உயர்ந்து வருகிறது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நாட்டின் மொத்த கடன் அளவு 2.47 டிரில்லியன் டாலராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசின் கடன் அளவு தலைக்கு மேல் இருப்பதாகவும், அது அந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சுமையாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டின் முடிவில் நாட்டின் மொத்த கடன் அளவு அல்லது நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் மொத்த மதிப்பு 2.47 டிரில்லியன் டாலர் அதாவது 205 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் 200 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் வெறும் 6 மாத காலத்தில் நாட்டின் மொத்த கடன் அளவு 6 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது தெரிகிறது, அதாவது மாதத்திற்கு 83,333 கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கடனில் மாநில அரசுகளின் கடனும் அடக்கம், அப்போ மத்திய அரசின் கடன் எவ்வளவு..? இந்த 205 லட்சம் கோடி ரூபாய் கடனில் மத்திய அரசு மட்டும் 161.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வைத்துள்ளது, இது மார்ச் காலாண்டு முடிவில் 150.4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மத்திய அரசு வெறும் 6 மாதத்தில் 10.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் ஒரு மாதத்திற்குச் சுமார் 1.783 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது மத்திய அரசு என இந்தியாபாண்ட்ஸ்.காம் தளம் தெரிவித்துள்ளது.
இந்தியாபாண்ட்ஸ்.காம் தளத்தின் தலைவரான விஷால் கோங்கா ஆர்பிஐ தரவுகளை அடிப்படையாக வைத்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 2021ல் உருவான இந்தியாபாண்ட்ஸ்.காம் தளம் செபி-யில் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் பத்திர முதலீட்டுத் தளமாகும். இந்தியாவின் மொத்த கடன் அளவு, மத்திய அரசின் கடன் அளவு ஆகிய தரவுகளை ஆர்பிஐ, கிளியரிங் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா, செபி ஆகிய 3 தளத்தில் திரட்டப்பட்ட தகவல்களை வைத்து இந்தியாபாண்ட்ஸ்.காம் வெளியிட்டு உள்ளது.
நாட்டின் மொத்த கடன் அளவான 205 லட்சம் கோடி ரூபாயில் மாநில அரசுகளின் பங்கீடு 24.4 சதவீதம் கிட்டத்தட்ட 50.18 லட்சம் கோடி ரூபாய். Treasury bills பிரிவில் 9.25 லட்சம் கோடி ரூபாய், கார்ப்பரேட் பத்திரங்கள் பிரிவில் 44.16 கோடி ரூபாய் கடன் உள்ளது என இந்தியாபாண்ட்ஸ்.காம் தெரிவித்துள்ளது.