திடீரென சரிந்து விழுந்த தேர்… அலறியடித்த பக்தர்கள்… தைப்பூச கொண்டாட்டத்தில் விபரீதம்!
நேற்றைய தினம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பொன்மலை ஆண்டவர் கோவில் தைப்பூச திருவிழாவின் போது, பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்த போது எதிர்பாரதவிதமாக தேர் சரிந்து விபத்துக்குள்ளானது.
பக்தர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழாவை நேற்று பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர். பழனி, திருச்செந்தார் உள்ளிட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும், மாநிலம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சில கோவில்களில் தேர்களும் பவனி வந்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டயம்பாளையம் கிராமம். இங்கு புகழ்பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் நடைபெறும். அதன்படி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு நேற்று தேர் ஊர்வலம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டவாறு வடம்பிடித்து தேரை இழுத்தனர். கோவில் வீதி வளைவில் தேர் திரும்பிய போது, தேரின் சக்கரங்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்தன. ஆனால், இதை அறியாமல் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்ததால் தேர் சரிந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்ததை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.