`அறநிலையத்துறைக்குள் ஆய்வு செய்ய முதல்வருக்கு அதிகாரம் கிடையாது!’ – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களிடம், கடந்த சில வருடங்களாக வனத்துறை சார்பில் 100 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசாங்கத்தின் எந்த உத்தரவுப்படி யாரைக் கேட்டு இவ்வாறு வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை வசூல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து அரசாங்கத்திற்கு அவர்கள் கணக்கு தெரிவிக்கவேண்டும்.
ஆண்டாள் கோயில்
மலையடிவாரத்தில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கார் நிறுத்துவதற்குண்டான கட்டணத்தில் வனத்துறையினர் பங்கு கேட்கிறார்கள். இந்த உரிமையை வனத்துறையினருக்கு யார் அளித்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்று சாமியை வழிபட்டு வந்த மக்கள், தற்போது சாமி தரிசனம் செய்யவேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குலதெய்வ கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக வனப்பகுதிக்குள் சின்ன அளவேனும் வசதிகள் செய்துத்தரப்படவில்லை. சாலை, ஓடை பாலம் போன்றவற்றை அமைக்கவில்லை. வனப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பாலம் அமைப்பதற்கும், சுற்றுப்புற சூழலை பராமரிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி என்ன ஆனது?
ஜீயர்
அறநிலையத்துறைக்குள் ஆய்வு செய்வதற்கு தமிழக முதல்வருக்கே அதிகாரம் இல்லை என சட்டம் இருக்கும்போது, அறநிலையைத்துறைக்குச் சொந்தமான கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய வனத்துறையினருக்கு யார் அதிகாரம் அளித்தது… இந்தக் கட்டண வசூல் திட்டம், இந்து மக்கள் தங்களின் குலதெய்வ கடவுளை வணங்கி வருவதை தடுப்பதற்கான சதித்திட்டமாக தோன்றுகிறது. இது முறையான செயல் கிடையாது. வனப்பகுதிக்குள் நுழைய இனிமேல் எந்த கட்டணமும் வசூல் செய்யக் கூடாது.