பாகிஸ்தான் என்ற நாடே அழித்து ஒழிக்கப்படும்!: பாக். ராணுவ தளபதி பேச்சுக்கு தாலிபான் பதில்!

பாகிஸ்தான் என்ற நாட்டையே அழித்தொழித்துவிடுவோம் என்று தாலிபன் ஆதரவு பயங்கரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பலுசிஸ்தானில் கிளர்ச்சிக்கு ஆப்கானிஸ்தான் உதவுவதாக ஜெனரல் முனீர் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமாபாத்துடன் ஒருபோதும் நட்பாக இருந்ததில்லை என்றும் கூறினார். அவரது பேச்சுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பதில் கொடுத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் அறிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்ஷிரி தாலிபான் தளபதி அப்துல் ஹமீத் கொராசானி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. “விரைவில் தெஹ்ரீக்-இ-தலிபானின் வீரர்கள் உங்கள் துரோக, அடக்குமுறை அரசாங்கத்தை தூக்கி எறிவார்கள். முல்லா ஹெபத்துல்லா உத்தரவிட்டால், பாகிஸ்தான் பூமி முகமே இல்லாமல் துடைத்து அழிக்கப்படும்” என்று கொராசானி பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது ஜெனரல் முனீர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஒரு பாகிஸ்தான் குடிமகனின் வாழ்க்கை ஆப்கானிஸ்தானை விட முன்னுரிமை பெறுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் கிளர்ச்சிக்கு ஆதரவு கிடைப்பதாகவும் முனீர் விமர்சித்தார். ஆப்கானிஸ்தான் உருவான பின்பும் பாகிஸ்தான் ஐநாவுக்குள் நுழைவதற்கு எதிராக இருப்பது வரலாற்றுத் விரோதம் எனவும் குற்றம் சாட்டினார்.

“எங்கள் மக்கள் வரலாற்றைப் படிப்பதில்லை. எதையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முனீர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் குடிமக்களின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

முனீரின் இந்தப் பேச்சு தாலிபான்களின் செல்வாக்கு மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் ராணுவ அமைப்பிற்குள் அதிகரித்துவரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அமைந்தவுடன் பாகிஸ்தானில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதால் இஸ்லாமாபாத் மற்றும் காபூல் இடையேயான உறவுகள் சிதைந்துள்ளன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தாலிபான்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாகிஸ்தான் ராணுவம்தான் பொறுப்பு என்று கூறுகிறது.

2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் ஆட்சியைப் பிடித்தனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத குழு தொடர்படைய பயங்கரவாதத் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் ஆயுதப் படையினர் பலர் பலியாகியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *