டெக் ஊழியர்களின் கருப்பு பக்கம்.. கண்ணாடி பில்டிங், ஏசி காத்து எல்லாம் சும்மா..!
இந்திய டெக் துறையைச் சேர்ந்த 43 சதவீத ஊழியர்கள் தங்களது பணிச்சுமை காரணமாக உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. நீண்ட நேர பணி நேரம் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. நாலேஜ் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
பரியிங் தி பர்ன் அவுட்- டீகோடிங் தி ஹெல்த் சேலஞ்சஸ் ஆப் இந்தியாஸ் டெக் ஜீனியஸஸ் என்ற தலைப்பில் இந்திய டெக்னாலஜி நிபுணர்களுக்கு வேலை தொடர்பான சிக்கல்களால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். Onsurity-KCCI ஆய்வின் கண்டுபிடிப்புகள், நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் முழுத் திறனையும் அதிகப்படுத்தும் வழியில் வரும் சவால்களுக்கு ஒரு வழியை வழங்குகிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்: இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களில் 50% க்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 52.5 மணிநேரங்களை வேலைக்காகச் செலவிடுகின்றனர். இது ஒட்டுமொத்த தேசிய சராசரியான வாரத்துக்கு 47.7 மணிநேரத்தை விட அதிகமாகும்.
55% தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரம் கழிந்து வேலை செய்வது அவர்களின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக டெக் ஊழியர்கள் பெரும்பாலானோர் அமிலத்தன்மை, குடல் பிரச்னைகள், முதுகு மற்றும் கழுத்து வலி, ஒழுங்கற்ற தூக்க சுழற்சிகள், தசை விறைப்பு, கண்பார்வை தொடர்பான பிரச்னைகள், எடை அதிகரிப்பு, தீவிர தலைவலி ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
ஏறக்குறைய 45% தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை அவர்களின் நல்வாழ்வைக் குறைக்கின்றன. அவர்கள் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க போராடுகிறார்கள்.
26% க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மோசமான தூக்க இழப்பை எதிர்கொள்கின்றனர், அவர்களில் 51% க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு சராசரியாக 5.5 முதல் 6 மணிநேரம் தூங்குகிறார்கள்.
74% தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை தேவைகள் காரணமாக குடும்ப நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை தியாகம் செய்கிறார்கள்.