இனி ஆதார் கார்டின் மாஸ்கிங் முறையை பயன்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு..!
சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படும் போது உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட சான்றுக்காக பிரதி ஆவணம் அதாவது பத்திரத்தின் நகல் உடனே வழங்கப்படும். ஆனால் உரிமையாளர்களுக்கு அசல் ஆவணம் சில நாட்களுக்கு பிறகே வழங்கப்படும். இத்தகைய பிரதி ஆவணத்தை உரிமையாளர் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பிரதி ஆவணங்களை மற்றவர்கள் பெறும் பொழுது அதில் உள்ள உரிமையாளரின் ஆதார் விவரங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பும், அதே சமயம் உரிமையாளர்கள் தங்களது பிரதி ஆவணங்களை யார் யார் பெற்றவர்கள் என்பதை அறிய முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இது உரிமையாளருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்னும் அச்சத்தில் பல புகார்களும் பத்திரப்பதிவு துறை மீது எழுந்துள்ளது. இது குறித்து சார் பதிவாளர் அலுவலக அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பத்திர பதிவின் போது எவ்வாறு உரிமையாளர்களின் ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறதோ அதைப்போலவே பிரதி ஆவணங்கள் வழங்கப்படும் போது பெறுபவரின் ஆதார் எண்ணையும் ஆன்லைனில் பதிவு செய்யும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சார் பதிவாளர் சரிபார்க்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளரின் ஆதார் எண்ணை பாதுகாக்க செத்து பாத்திரங்களில் ஆதார் எண்ணை மாஸ்கிங் முறையில் மறைப்பதற்காக பத்திரப் பதிவுக்கான ‘ஸ்டார் 2.0’ சாப்ட்வேரில் சில தொழில்நுட்ப மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.