இந்தியர்களின் கனவு நிறைவேறியது.. மாண்புமிகு பிரதமருக்கு நன்றி.. ராமர் கோவில் திறப்பு – வாழ்த்து சொன்ன அர்ஜுன்!
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ம் தேதி புனித சடங்குகள் துவங்கியது. பிரதமர் மோடி அவர்களும் சிறப்பு விரதம் இருந்து நாளை ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைக்க சென்னை வந்திருந்த பிரதமர் மோடி அவர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ராமர் கோவிலுக்கு சீதனமாக அங்கு கொடுக்கப்பட்ட பொருட்களையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், அங்கிருந்து தனுஷ்கோடிக்கு சென்று அங்கும் புனித நீராடி இறுதியாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நாளை காலை அயோத்தியில் ராமர் கோவிலானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக திறக்கப்பட உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தற்பொழுது அயோத்தி புறப்பட்டுள்ளனர். கோவிலுக்குள் நுழைய உரிய அனுமதி சீட்டுகளோடு இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு மாபெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரபல நடிகரும், இயக்குனருமான ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள், கடந்த 500 ஆண்டு காலமாக இந்த ராமர் கோவிலுக்காக பல்வேறு உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார். இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தருணமாக இது இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கு காரணமாக இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு தீவிர அனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் அனுமானுக்கு அவர் ஒரு கோவில் கட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.