போக்குவரத்து காவலரின் விரல்களைக் கடித்த வாகன ஓட்டி… காரணம் என்ன..?

தினசரி சாலையில் பயணம் செய்கின்ற நமக்கு போக்குவரத்துக் காவலர்களின் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்திருக்கும். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்திட போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவதுதான் அவர்களுடைய பணி. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால், அவர்கள் மீது போக்குவரத்துக் காவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பெங்களூரு மாநகரில் போக்குவரத்து காவலர்கள் இதுபோல கடமையை செய்து கொண்டிருந்தபோது, சையது ஷஃபி என்ற நபர் தலைக்கவசம் அணியாமல் அந்த வழியாக வாகனம் ஓட்டி வந்தார். அப்போது போக்குவரத்து தலைமைக் காவலர் சித்ரமேஷ்வரா கஜலாகி, அந்த நபரை மடக்கி அவருடைய வாகனத்தை படம் பிடிக்க முயற்சி செய்தார்.

மேலும் காவலர் ஒருவர் வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சையது ஷஃபி, காவலரின் விரல்களை கடித்து வைத்தார். மேலும் போக்குவரத்து காவலர்களுடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, “வாகன ஓட்டி சையது ஷஃபியை தடுத்தி நிறுத்தி அவருடைய வாகனத்தின் நம்பர் பிளேட்டை காவலர் படம் பிடித்தபோது அந்த நபர் கடுமையாக திட்ட தொடங்கி விட்டார். வேண்டுமானால் நம்பர் பிளேட்டை கழட்டி கையில் தருகிறேன், அதன் பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

மேலும், தலைமைக் காவலரின் செல்ஃபோனை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது அந்த நபர் விரல்களை கடித்து வைத்து விட்டார். இதையடுத்து காவலர்கள் அந்த நபரை கைது செய்தனர்’’ என்று தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *