வெள்ளம் வடிய வடிய வெளிவரும் பாதிப்புகள் – நிர்கதியில் தூத்துக்குடி மக்கள், முடங்கிய தொழில் துறை!
வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே ஒரு பாலமே முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வசவப்பபுரம் முதல் தூத்துக்குடி துறைமுகம் வரை சாலையில் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதங்களை சரிசெய்ய பல கோடி ரூபாய் ஆகும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை, திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலைகள், தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. தாமிரபரணி ஆற்றில் ஏரல், ஆத்தூர் பாலங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள குடிநீர் குழாய்கள், உறைகிணறுகள் ஒட்டுமொத்தமாக அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் முடங்கியுள்ளது.
மாவட்டம் முழுவதும் ஏராளமான மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை என, அரசு அலுவலகங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாமிரபரணி பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால்கள், நெல் பயிர் நடவு செய்த வயல்கள், உழவு செய்த வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் ஆற்று மணல் சேர்ந்துள்ளது. அதை அகற்றி வயல்களை சரி செய்ய விவசாயிகளுக்கு பெரும் செலவு ஏற்படும்.
இதேபோல் தொழில்நகரமான தூத்துக்குடியில் கடந்த 5 நாட்களாக அனைத்து தொழில்களுமே முழுமையாக முடங்கி கிடக்கின்றன. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கோரம்பள்ளம் தொழில் பேட்டை என, மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து, இயந்திரங்கள், உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என, பல ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டன் உப்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதேபோல் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதி நகரங்களில் வணிக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து, பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இவ்வழியே போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஏரல் பகுதியில் அரிசி ஆலைகளுக்குள் தண்ணீர் புகுந்து டன் கணக்கில் அரிசி சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இவைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கணக்கெடுப்பு பணிகளை அரசு விரைவாக செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவி களை விரைவாக செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் குரலும் வலுத்துள்ளது.
உயிரிழப்பு 55 ஆக அதிகரிப்பு: இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.