சலங்கை கட்டி ஆடிய இங்கிலாந்து அணி.. கண்மூடி திறப்பதற்குள் மாறிய ஆட்டம்.. அஸ்வின் கொடுத்த ட்விஸ்ட்!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் பேஸ் பால் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு காரணமாக டாஸின் போதே இந்திய ரசிகர்கள் மைதானத்தில் அதிகளவில் காணப்பட்டனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் கிரேலி – பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் 1 ரன் சேர்க்கப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய 2வது ஓவர் முதல் இங்கிலாந்து அணி ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியது. அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி கிராலி அசத்த, பும்ரா வீசிய அடுத்த ஓவரில் டக்கெட் 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
8 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்திருக்க, ஆட்டம் மாறுவதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் அட்டாக்கில் இருந்து வெளியேற்றினர். இதையடுத்து அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அட்டாக்கில் வந்தனர். ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்ததும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் கூடுதல் கவனத்துடன் பேட்டிங் செய்தனர்.
ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை முயற்சித்து பவுண்டரி அடிக்க தொடங்கினர். இதனால் களம் பரபரப்பானது. 11 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை 50 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். இந்த நிலையில் அஸ்வின் வீசிய ஓவரில் அதிரடியாக ஆடிய வந்த பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இடதுகை பவுலரான டக்கெட் அஸ்வினை எதிர்கொள்ளும் போது பதற்றத்துடனே எதிர்கொண்டார்.
இதுவரை அஸ்வினுக்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பென் டக்கெட், 48 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறையும் விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளார். அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இடதுகை பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தி இருக்கிறார். தற்போது அதிரடியாக ரன்களை குவித்த போது, அஸ்வினை எதுவும் செய்ய முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.