விமான விபத்தில் மொத்த குடும்பமும் பலி… காரணமானவரை தேடிச் சென்று பழி வாங்கிய நபர்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் தவறு காரணமாக 71 பேர் மரணமடைந்த நிலையில், மொத்த குடும்பத்தையும் அந்த விபத்தில் இழந்த நபர் ஒருவர் காரணமானவரை பழிவாங்கியுள்ளார்.

நடுவானில் மோதி விபத்து
ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்றும் DHL நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்றும் சுவிட்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள ஜேர்மன் நகரம் ஒன்றில் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது.

கடந்த 2002 ஜூலை மாதம் நடந்த இந்த கோர விபத்தில் மொத்தமாக 71 பேர்கள் பலியாகினர். ரஷ்ய விமானத்தின் 69 பயணிகள் மற்றும் ஊழியர்கள், DHL விமானத்தின் விமானிகள் என அனைவரும் பலியாகினர்.

தொடர்புடைய ரஷ்ய விமானத்தில் சுற்றுலாவுக்கு என 46 பாடசாலை மாணவர்களும் பயணித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் தகவல் தெரிய வந்ததும் சம்பவயிடத்திற்கு முதலில் விரைந்தவர் ரஷ்ய கட்டிடக் கலைஞர் Vitaly Kaloyev.

இவரே தமது பிள்ளைகள் இருவர் மற்றும் மனைவியின் சடலத்தை அடையாளம் கண்டவர். 36,000 அடி உயரத்தில் விபத்தில் சிக்கிய இரு விமானங்களின் கட்டுப்பாடும் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இருந்தே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமானவர்
இந்த விபத்துக்கு காரணமானவர் என அடையாளம் காணப்பட்டவர் Peter Nielsen. அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட அறையில் இருந்து இவர் விமானங்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று பராமரிப்பு பணியாளர்கள் மோதல் எச்சரிக்கை அமைப்பு மற்றும் அவரது சில தொலைபேசி இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்துள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய விமானம் மற்றும் DHL விமானத்தை கண்காணித்து வந்தவரிடம் மூன்றாவது விமானம் ஒன்றும் உதவி கோரியுள்ளது.

இவருக்கு உதவ அப்போது அந்த அறையில் எவரும் இல்லை. அதேவேளை நான்காவது விமானமும் உதவி கோரியுள்ளது. கடும் அழுத்தத்தை எதிர்கொண்ட Peter Nielsen பரபரப்பானார். அத்துடன் தவறுதலாக ரஷ்ய பயணிகள் விமானம் மற்றும் DHL விமானத்திற்கும் 36,000 அடியில் பறக்க உத்தரவிட்டார்.

ஆனால் TCAS எனப்படும் எச்சரிக்கை அமைப்பு, அந்த இரு விமானிகளிடமும் முறையாக எச்சரித்துள்ளது. விமானிகள் அந்த அமைப்பின் எச்சரிக்கையை கவனித்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இரு விமானிகளும் Peter Nielsen-ன் வழிகாட்டுதலை நம்பினர். இதனால் 36,000 அடி உயரத்தில் இரு விமானங்களும் மோதிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதே வேளை ஸ்பெயின் நாட்டில் தமது குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருந்துள்ளார் கட்டிடக் கலைஞரான Vitaly Kaloyev.

சுவிட்சர்லாந்தில் அவர் வீட்டுக்கே
ஆனால் நெஞ்சைப் பிளக்கும் தகவல் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது. அங்கிருந்து உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளார் Vitaly Kaloyev. மொத்த குடும்பத்தையும் விமான விபத்தில் இழந்தவருக்கு, அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் போனது.

இதனிடையே இந்த விவகாரத்தில் வழக்கேதும் தொடுக்க வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சுவிஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனம் சுமார் 140,000 பவுண்டுகள் இழப்பீடும் அளித்துள்ளது.

ஆனால் அதில் அவர் மனம் ஆறுதலடையவில்லை. தமது இழப்பிற்கு நீதி வேண்டும் என முடிவு செய்தார். 2004 பிப்ரவரி மாதம் 4ம் திகதி Peter Nielsen-ன் முகவரியை கண்டுபிடித்து, மன்னிப்பு கோரும்படி சுவிட்சர்லாந்தில் அவர் வீட்டுக்கே சென்றார் Vitaly Kaloyev.

மட்டுமின்றி, மறைத்து வைத்திருந்த கத்தியால் Peter Nielsen-ஐ கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்த கொலை வழக்கில் Vitaly Kaloyev கைதாகும் போது, அந்த கொலை தொடர்பில் அவர் மொத்தமாக மறந்திருந்தார் என்றே கூறப்படுகிறது.

விசாரணையின் முடிவில் சுவிஸ் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 2007ல் அவர் விடுதலையான போது ரஷ்யாவில் அவருக்கு நட்சத்திர வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *