கோலி, ரோஹித் காலம் முடிந்தது.. இனி உலக கிரிக்கெட்டை ஆளப் போவது இந்த 2 வீரர்கள் தான்.. சேவாக் சூசகம்
இந்திய கிரிக்கெட்டில் கடந்த பத்து ஆண்டுகள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இனி 25 வயதை கூட கடக்காத இரண்டு இளம் இந்திய வீரர்களுக்கான காலம் என வீரேந்தர் சேவாக் கூறி இருக்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனாலும், இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து இருந்தார்.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் தனி ஆளாக நின்று இரட்டை சதம் அடித்து அணியை 396 ரன்கள் குவிக்க வைத்தார் ஜெய்ஸ்வால். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சதம் அடித்து இந்திய அணி 255 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை 25 வயது கூட ஆகாத ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் மொத்தமாக சுமந்து இருக்கின்றனர். இதை அடுத்து அவர்களை பாராட்டிய முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக், “25 வயது கூட நிரம்பாத இரண்டு இளம் வீரர்கள் அணிக்கு தேவை எனும்போது எழுந்து நின்று ஆடுவது பார்க்க ஆனந்தமாக உள்ளது.” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இந்த இருவரும் அடுத்த பத்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.” என சேவாக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார்கள். இந்த நிலையில் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருப்பார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் சேவாக்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இருவருமே சேவாக் போல துவக்க வீரர்கள் என்பது தான். சுப்மன் கில் டெஸ்ட் அணியில் மட்டும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். கிட்டத்தட்ட துவக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இணையாக ஜெய்ஸ்வாலும், மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வரும் விராட் கோலிக்கு இணையாக சுப்மன் கில்லும் இப்போதே ஆடி வருகிறார்கள்.