ஏற்றுமதி தடையோ பெருசுக்கு… பாதிப்போ சிறுசுக்கு! – வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கண்ணீர்

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்” என கிராமங்களில் கேலியாக சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ப பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படும் சின்ன வெங்காயம், சில்லறை விலையில் சந்தையில் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், இடைத்தரகர்களும் மொத்த வியாபாரிகளும்தான் அதிக லாபமடைகின்றனர். விவசாயிகளுக்கு நஷ்டம்தான். விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.35-க்கு விற்றால்தான் ஓரளவுக்கு கட்டுப் படியாகும். சின்ன வெங்காயம் விளைவிக்க ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம் 600 கிலோ தேவைப்படும்.

உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரம், களையெடுப்பு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை, தரம்பிரித்து விற்பனைக்கு தயார் செய்தல் ஆகிய பணிகளை செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை ஆகும். இதுபோக விதை வெங்காயம் வாங்குவதற்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகும்.

வெங்காய விலை அதிகரிக்கும் காலங்களில் விதை வெங்காயம் வாங்குவதற்கே 1 ஏக்கருக்கு ரூ.60,000 ஆகும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரை செலவாகிறது. அதே நேரம் ஒரு ஏக்கருக்கு 6 அல்லது 7 டன் அளவுக்கே மகசூல் கிடைக்கிறது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *