‘எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்’ புதுச்சேரி சிறுமி கொலை சம்பவத்தில் கமலை சாடிய பிரபல இயக்குனர்
புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அதற்கு கண்டம் தெரிவித்து வருகின்றனர். கமலும், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில், நீண்ட பதிவொன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
“ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம்.
மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி, மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். “மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகள்தான்.
போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மேற்குத் தொடர்ச்சிமலை இயக்குநர் லெனின் பாரதி, “எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல், கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து, ‘எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்’ என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.