பயங்கர காஸ்ட்லீயான கேடிஎம் பைக்குக்கு நேர்ந்த கதி!! முதியவருக்காக ஒன்று கூடிய மக்கள்!
கேடிஎம் ஆர்சி390 (KTM RC390) பைக் ரைடர் ஒருவர் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே வந்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார். இந்த விபத்தில் சேதமடைந்த கேடிஎம் ஆர்சி390 பைக் பிரத்யேகமான பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே, இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த செய்திகளை தினந்தோறும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு சர்வ சாதாரணமாக நிகழ்ந்துவரும் சாலை விபத்துகளுக்கு பல்வேறு விஷயங்கள் காரணங்களாக அமைகின்றன. அந்த காரணங்களுள் முக்கியமானதாக, வேகமான & ஆக்ரோஷமான டிரைவிங்கை சொல்லலாம்.
அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது தான். அதிவேக பயணங்களில் பைக் ரைடர்கள் தான் அதிகளவில் ஈடுப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை காலியாக இருந்தாலும், அதிவேகமாக பைக்கில் செல்ல கூடாது. குறிப்பாக, நகர்புற சாலைகளில் அதிவேக ரைடிங் கூடவே கூடாது. ஏனெனில், நம் நாட்டு சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்றே சொல்ல முடியாது.
இதன் விளைவாக நடந்த விபத்துகள் பலவற்றை இதற்கு முன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், அதிவேகமாக சென்ற கேடிஎம் ஆர்சி390 பைக் ரைடர் மோதி, முதியவர் ஒருவர் காயமடைந்து உள்ளார். இந்த விபத்துக்கு பைக் ரைடர் மற்றும் அந்த முதியவர் என இருவர் மீதும் தவறு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம், இந்த விபத்து ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. அதிக மலைகளை கொண்ட மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம் ஆகும். மலைகளில் சாலைகள் எவ்வாறு இருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அத்தகைய, வளைவுகளை அதிகம் கொண்ட மலைப்பிரதேச சாலைகளில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஆனால், இந்த குறிப்பிட்ட கேடிஎம் ஆர்சி390 பைக் ரைடர் மிகவும் அதிவேகமாக, மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் விதமாக ஆக்ரோஷமாக சம்பவத்தின்போது சென்றுள்ளார். வாகனங்களுக்கு இடையே இருக்கும் குறுக்கலான வழியில், அபாயக்கரமான முறையில் பைக்கில் அவர் புகுந்து செல்வதை வீடியோவில் காண முடிகிறது.
இவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே முதியவர் ஒருவர் வந்துள்ளார். இதனை கண்ட இந்த ஆர்சி390 பைக் ரைடர் உடனடியாக பிரேக்கை கொடுத்தாலும் அது பலனளிக்கவில்லை. முதியவர் மீது பைக் மோதிவிட்டது. கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த அந்த முதியவர் மீது பைக் மோதியதில், கையில் இருந்த பொருட்களுடன் அவர் தூக்கி வீசப்பட்டார்.
அதேபோல், பைக்கில் இருந்து ரைடரும் தூக்கி வீசப்பட்டுள்ளார். பைக் அருகில் இருந்த கம்பத்தின் மீது மோதி சாலையில் சரிந்தது. நல்ல வேளையாக, முதியவர் மற்றும் ரைடர் இருவருக்கும் பெரியதாக எந்த காயமும் ஏற்படவில்லை. சாலைக்கு அருகே இருந்தவர்கள் அந்த முதியவரை எழுப்பி அமைதிப்படுத்தினர். அத்துடன், விபத்திற்குள்ளான பைக் ரைடரையே மருத்துவமனைக்கு முதியவரை அழைத்து செல்ல வற்புறுத்தினர்.