ரூ.50132 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் முதல் பெண் தலைவர்.. யார் இந்த கீதா கபூர்?

ஒரு காலத்தில் வீட்டிற்குள் அடைபட்டு இருந்த பெண்கள் இன்று சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஏளனம் பேசிய இதே நாட்டில்தான் இன்று விஞ்ஞானியாகவும், விமானியாகவும், மருத்துவராகவும், விண்வெளி வீரராகவும், தொழில் முனைவோராகவும், நாட்டை ஆளும் தலைவியாகவும் பெண்கள் சாதித்துள்ளனர்.
சமீபத்தில் கூட குடியரசு தினத்தன்று கடமைப் பாதையில் முதல்முறையாக பாதுகாப்பு படையின் மருத்துவ சேவைப் பிரிவின் அனைத்து பெண்கள் குழு அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில், 50, 132 கோடி மதிப்புள்ள மத்திய பொது துறை நிறுவனத்தின் (CPSE) வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி அரசுக்கு சொந்தமான சட்லஜ் ஜல் வித்யூத் நிகம் நிறுவனத்தின் (SJVNL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்ற கூடுதல் பொறுப்பையும் இவர் ஏற்றுள்ளார்.
இதற்கு முன்பு இவர் மத்திய அரசு நிறுவனமான நீர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான அவரது பெயர் கீதா கபூர். இவருக்கு வயது 59.
கீதா கபூரின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையுமே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல. 2018-ம் ஆண்டிலேயே SJVN நிறுவனத்தின் முதல் முழு நேர பெண் இயக்குனராக பதவியேற்று வரலாற்றில் இடம்பிடித்தார் கபூர். 1992-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரியாக SJVN நிறுவனத்தில் பணியில் சேர்ந்த கபூர், ஷிம்லாவில் உள்ள ஹிமாச்சல பிரதேஷ் பிசினஸ் பள்ளியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். எம்பிஏ படிப்பில் மனித வளத்துறை மேலாண்மையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ள கபூர், கடந்த 31 வருடங்களாக SJVN நிறுவனத்தில் சிறப்பாகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்துள்ளார். அதற்கு கிடைத்த வெகுமதியே இப்போதுள்ள பொறுப்பு. மனித வளம், சிவில் கட்டுமானம், சிவில் ஒப்பந்தம் போன்ற துறைகளில் இவருக்கு பல ஆண்டு அனுபவம் உள்ளது.
மனித வளத்துறையில் தன்னுடைய பல வருட அனுபவத்தால் அரசின் பல கொள்கை முடிவுகளை வகுப்பதில் முக்கியமான நபராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி நிலையான இயக்க நடைமுறைகளை வகைப்படுத்துவது, ஊழியர் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான ஊதியங்களை முறைப்படுத்துவது போன்றவற்றில் முக்கியமான காரணகர்த்தாவாக இருந்துள்ளார் கபூர். மேலும் தான் தலைமையேற்று நடத்தும் நிறுவனத்தை, 2024-ம் ஆண்டில் பணிபுரிய மிகவும் சிறந்த நிறுவனம் என்ற மதிப்புவாய்ந்த பெயரை எடுக்க காரணமாகவும் இருந்துள்ளார்.