ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில்.. பிப்ரவரி 14ம் தேதி திறப்பு!
ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் திறப்பு விழா பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ளதால், வெளிநாட்டில் இருந்து கோயிலுக்கு செல்ல பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாப்ஸ் இந்து ராக் கோயில் வரும் பிப்ரவரி 14 அன்று திறக்கப்படும், ஆனால் பிப்ரவரி 18 அன்றுதான் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஐக்கிய அரபு அமிரகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய கற்கோயில் வருகைக்கு பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளவர்கள் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே வருகைக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாப்ஸ் இந்து கோயில் திட்டத்தின் தலைவர் பூஜ்ய சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் கூறுகையில், கோயிலுக்கு செல்வதற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பதிவு செய்துள்ளதாகவும், எனவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் மார்ச் 1ஆம் தேதிக்கு பின் பதிவு செய்யுமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோயிலுக்குச் செல்ல விரும்பும் மக்கள் குறிப்பிட்ட இணையதளம் மூலமாகவோ அல்லது ‘Festival of Harmony’ என்ற செயலி மூலமாகவோ பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். கற்கோயிலின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்ட நிலையில், ‘Festival of Harmony’ என்று பெயரிடப்பட்ட இக்கோயிலின் திறப்பு விழாவிற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.