நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவன லேண்டர்! அப்பல்லோவுக்குப் பின் சாதித்த ஒடிசியஸ்!

அமெரிக்க தனியார் நிறுவனமான இன்ட்யூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) தயாரித்த IM-1 விண்கலத்தின் ஒடிசியஸ் (Odysseus) லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கிறது.

அப்பல்லோ சகாப்தத்துக்குப் பிறகு, நிலவில் தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலம் இதுவாகும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவன லேண்டர் என்ற பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் அப்பல்லோ கடந்த 1972ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்கியது. கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 3 நிலவின் தென்துருவத்தை அடைந்தது. அண்மையில், கடந்த மாதம் ஜப்பானிய விண்கலம் நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்து சாதித்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.

ஒடிஸியஸ் விண்கலம் வியாழக்கிழமை மாலை 6:23 மணிக்கு நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது. ஆனால், தரையிறக்கத்தைத் தொடர்ந்து விண்கலம் பக்கவாட்டில் சரிந்து கிடக்கிறது. இருப்பினும், ஒடிசியா் லேண்டரில் இருந்து தரவுகள் மற்றும் மேற்பரப்பு புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக இன்ட்யூடிவ் மெஷின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் எனப்படும் நாசாவின் விண்கலம் மூலம் ஒடிஸியஸ் லேண்டரை படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இன்ட்யூடிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீவ் அல்டெமஸ் கூறுகையில், “இது ஒரு திகிலூட்டும் அனுபவமாக இருக்கும் எனத் தெரியும். ஆனால் இப்போது நாங்கள் நிலவை அடைந்துவிட்டோம். தகவல் பரிமாற்றம் மேற்கொள்கிறோம். நிலவுக்கு நல்வரவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிலவின் தென்துருவத்திற்கு அருகே உள்ள மலாபெர்ட் ஏ என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் ஒடிசியஸ் லேண்டர் தரையிறங்கியுள்ளது. மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டது இந்தப் பகுதி ஒப்பீட்டளவில் தட்டையாக இருந்ததால் தரையிறங்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 15ஆம் தேதி, ஒடிஸியஸ் லேண்டர் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியின் நிலவு லேண்டர், ஜனவரி 8ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *