ரஸ்ஸல் ஒருவரால் ஆட்டமே மாறிவிட்டது.. நாங்கள் செய்த தவறு இதுதான்.. ஓபனாக சொன்ன பேட் கம்மின்ஸ்!
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரஸ்ஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 64 ரன்களை விளாசினார். ஐதராபாத் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஹர்சித் ராணாவின் அசத்தலான பவுலிங்கால் கேகேஆர் அணி வென்றது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 29 பந்துகளில் 8 சிக்ஸ் உட்பட 63 ரன்கள் சேர்த்தார் ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை டாட் பாலாக வீசி அசத்தினார் ராணா. இதனால் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், கடைசி பந்து வந்த ஆட்டம் சென்றது. கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்ல போட்டியாக அமைந்துள்ளது.
கேகேஆர் அணியின் அதிரடி வீரர் ரஸ்ஸல் எதில் சிறந்தவரோ, அதனை மீண்டும் செய்துவிட்டார். எப்போதும் நாம் ஒரு திட்டத்துடன் வருவது போல், எதிரணியும் ஒரு திட்டத்துடன் வந்து செயல்படுத்த முயற்சிப்பார்கள். ரஸ்ஸலுக்கு எதிரான திட்டங்களும் அப்படித்தான். அவருக்கு பவுலிங் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. டி20 கிரிக்கெட்டில் அவரை போன்ற வீரர்களுக்கு பவுலிங் செய்வது தான் மிகவும் கடினமான பணி என்று சொல்ல வேண்டும்.
அவருக்கு பவுலிங் செய்யும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் இவ்வளவு அருகில் வந்து தோல்வியடைவோம் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கிளாஸன் மற்றும் ஷாபாஸ் அஹ்மத் இருவரும் ஐதராபாத் அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். சொந்த மண்ணில் மிகவும் பலம் வாய்ந்த அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி இருக்கிறோம். சிறப்பாக செயல்பட்ட வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். இன்னும் சில முன்னேற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. டாஸின் போது எடுத்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.