பையில் வைத்திருந்த அந்த பொருளுக்காக கைது செய்யப்பட்ட ஜேர்மானியர்… சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ரஷ்யா?
ரஷ்யா சென்ற ஜேர்மானியர் ஒருவர் பையில் இருந்த ஒருவகை மிட்டாய்களில் கஞ்சா கலக்கப்பட்டிருந்ததாக கூறி அவரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஜேர்மானியர்
38 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர், தான் இணையத்தில் சந்தித்த ஒரு பெண்ணைக் காண்பதற்காக ஜேர்மனியிலிருந்து ரஷ்யா சென்றுள்ளார்.
அவர் ரஷ்யாவின் புனித பீற்றர்ஸ்பர்க் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, விமான நிலைய அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டார்கள்.
அப்போது, அவரது பையில் கஞ்சா இலைகளின் படம் அச்சிடப்பட்டிருந்த ஒரு கவரில் சில மிட்டாய்கள் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள், அவற்றை வெளியே எடுத்தபோது, அவற்றிலிருந்து முகத்திலடிப்பதுபோல ஏதோ வாசனை வீசியுள்ளது. ஆகவே, அந்த மிட்டாய்களை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்ப, அவற்றில், கஞ்சாவிலுள்ள ஒரு ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
Tetrahydrocannabinol என்னும் அந்த ரசாயனம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு ரசாயனம் ஆகும். ஆகவே, அந்த ஜேர்மானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே, போதைப்பொருள் கடத்தியதாக, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு மில்லியன் ரூபிள்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ரஷ்யா?
இதற்கிடையில், ரஷ்யா இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காக காத்திருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது, ரஷ்யாவுக்கு, கைதிகள் பரிமாற்றத்துக்கு ஏதுவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் 2019ஆம் ஆண்டு, செசன்ய நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார் ரஷ்ய நாட்டவரான Vadim Krasikov என்பவர்.
ஆக, அவரை விடுவிக்கக் கோருவதற்காக இந்த ஜேர்மானியரை ரஷ்யா பயன்படுத்திக்கொள்ளக்கூடும். ஏற்கனவே, 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படும் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக, அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையான Brittney Griner என்பவரை கைது செய்து, அவர் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ரஷ்யா.
பின்னர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த Victor Bout என்னும் ரஷ்ய நாட்டவரான ஆயுதக் கடத்தல் குற்றவாளியை அமெரிக்கா ரஷ்யாவிடம் ஒப்படைக்க, அவருக்கு பதிலாக 2022 இறுதியில், Brittney Griner அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.