உலக மகா தாதா.. தாவூத் இப்ராஹிம் எல்லாம் பச்சா..!
உலக கிரிமினல் சரித்திரத்தில் மிகச் சிலர் தான் தங்களுடைய நெட்வொர்க்-ஐ சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்து தாவூத் இப்ராஹிம் போன்ற தாதாக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மற்ற அனைவரும் காவல் துறையினராலும், சட்டத்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட்டு உள்ளனர்.தாதா தாவூத் இப்ராஹிம் உலகப் பணக்காரர்களில் ஒருவர். போர்ப்ஸ் அறிக்கையின்படி 2015 ஆம் ஆண்டில் தாவூத் இப்ராஹிம்மின் நிகர சொத்து மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பில் 670 கோடி ஆகும். ஆனாலும் இவர் தாதாக்களில் பணக்காரர் அல்ல. சொத்துப்பட்டியலைக் கணக்கில் இட்டால் உலகத்திலேயே மிகப் பெரிய தாதா பணக்காரர் என்று வேறொருவர் வந்து நிற்கிறார். அவரது பெயர் பாப்லோ எஸ்கோபார். விக்ரம் படத்தில் பாப்லோ எஸ்கோபார் பாடல் மூலம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பிரபலமான இவர் கொலம்பியா நாட்டின் போதை சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னன். சாதாரண ஒரு விவசாயி மகனாகப் பிறந்த பாப்லோ எஸ்கோபார் உலகின் கொக்கெயின் மன்னன் என்று உலகை ஆட்டிப் படைத்து விட்டார். 1989 ஆம் ஆண்டின் போர்ப்ஸ் அறிக்கைப்படி உலகின் 7 ஆவது மிகப் பெரிய பணக்காரராக பாப்லோ எஸ்கோபார் பட்டியலிடப்பட்டார்.
அப்போது அவரது சொத்து மதிப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.900 கோடி ஆகும். பாப்லோ எஸ்கோபாரின் போதை சாம்ராஜ்ஜியமான மெடில்லின் கார்ட்டெல் உலக கொக்கெய்ன் மார்க்கெட்டில் 80 சதவீத பங்கை வைத்திருந்தது. 1980களின் மத்தியில் வாரத்துக்கு 420 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்தது. ஆண்டுக்கு மொத்தம் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மிகப் பெரிய அளவுக்கு சொத்தை வைத்திருந்தாலும் பாப்லோ எஸ்கோபாரின் செல்வாக்கு கிரிமினல் உலகத்தையும் தாண்டி இருந்தது. காரணம், அவரது தாராள குணம். இதற்காகவே அவர் ராபின்ஹூட் என்றும் அழைக்கப்பட்டார்.
ஏழைகள், வீடு அற்ற ஆதரவற்றோர், சமூக கால்பந்தாட்ட மைதானங்கள் அமைத்தல், மிருகக் காட்சி சாலை அமைத்தல் போன்ற நல்ல காரியங்களுக்கு பாப்லோ எஸ்கோபார் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார். கொலம்பியா அரசால் கைது செய்யப்பட்டிருந்த போது அந்நாட்டுடன் பாப்லோ எஸ்கோபார் பேச்சு நடத்தி தனக்கென்று தனியாக வசதிகள் படைத்த லா கட்டீட்ரால் என்ற சிறையை அமைத்துக் கொண்டார். அந்த சிறை வளாகத்தில் ஒரு கால்பந்து மைதானம்கூட இருந்தது. சிறைக்குள் இருந்தே தனது கிரிமினல் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார் பாப்லோ எஸ்கோபார்.