சிஎஸ்கே வீரர் வீட்டில் நடந்த பெரும் சோகம்.. உருக வைக்கும் கவிதையை வெளியிட்ட கிம் வாட்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த டெவான் கான்வே நியூசிலாந்து கிரிக்கெட் அணியிலும் முக்கிய வீரராக இருக்கிறார்.
அவருக்கு 2022இல் கிம் வாட்சன் என்பவருடன் திருமணம் நடந்தது. 2020 முதல் காதலித்து வந்த இருவரும், 2022இல் திருமணம் செய்து தங்கள் இல்லற வாழ்க்கையை துவக்கினர். சமீபத்தில் கிம் வாட்சன் கர்ப்பமானார். அதனால் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் இருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சில மாதங்கள் கடந்த நிலையில் கர்ப்பம் கலைந்து விட்டது.
ஆனால், மன தைரியத்தை இழக்காத கிம் வாட்சன் இது போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியமும், ஆறுதலும் அளிக்கும் வகையில் தனது அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் பொதுவெளியில் தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் அல்ல. கர்ப்பம் கலைந்ததால் ஏற்படும் கடினமான நேரத்தை நான் மட்டுமே அனுபவிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், அது குறித்து நான் அவமானகரமாக, கூச்சமாக நினைக்கக் கூடாது என விரும்புகிறேன் எனக் கூறி இருக்கிறார்.
மேலும், எனது அனுபவத்தை, எண்ணங்களை வெளிப்படையாக பேச வேண்டும் என நினைக்கிறேன். அதன் மூலம் அடுத்து இது போன்ற இழப்பை சந்திக்கும் பெண்ணுக்கு நான் உறுதுணையாக இருக்க விரும்புகிறேன். எங்கள் வாழ்வில் அந்த அதிசயம் ஒருநாள் நடக்கும். அப்போது அவர்களை எங்களின் மொத்த அன்பையும் செலுத்துவோம் எனக் கூறி இருக்கிறார் கிம் வாட்சன். இத்துடன் உயிருடன் பிறக்காத தன் குழந்தையை எண்ணி மனதை உருக்கும் எமி ஃபர்குஹார் என்ற பெண் கவிஞர் “Little Butterfly” என்ற தலைப்பில் எழுதிய, “I lived my life inside you” எனத் துவங்கும் ஆங்கில கவிதையை பகிர்ந்து இருக்கிறார்.