இந்தியாவில் சர்ரென உயர்ந்த மின்சார வாகன விற்பனை.. எத்தனை சதவீதம் தெரியுமா?
நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்களிடையே கணிசமாக அதிகரித்துள்ளது, இதனால் EV-க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 49.25 சதவீதம் அதிகரித்து கடந்த 2023-ஆம் ஆண்டில் 15,29,947 யூனிட்ஸ்களாக இருந்தது. ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் (FADA) இந்த தகவலை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. FADA தரவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் EV தொழில்துறை மொத்தம் 10,25,063 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
மின்சார இரு சக்கர வாகன விற்பனை 36.09% அதிகரிப்பு:
FADA பகிர்ந்திருக்கும் தகவலின்படி கடந்த 2022-ஆம் ஆண்டில் 6,31,464-ஆக இருந்த இருசக்கர வாகன EV விற்பனை 36.09 சதவீதம் அதிகரித்து 2023-ஆம் ஆண்டில் 8,59,376-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல த்ரீ-வீலர் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையானது கடந்த 2022-ஆம் ஆண்டில் 3,52,710 யூனிட்களில் இருந்து 2023-ல் 5,82,793 யூனிட்ஸ்களாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் சுமார் 65.23% வரை அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் பேசஞ்சர் வாகனங்களின் விற்பனை 114.71% அதிகரிப்பு:
கடந்த 2022-ஆம் ஆண்டில் 38,240-ஆக இருந்த எலெக்ட்ரிக் பேசஞ்சர் வாகன விற்பனை கடந்த ஆண்டு 114.71 சதவீதம் அதிகரித்து 82,105-ஆக இருந்தது என்று FADA அறிக்கை தெரிவிக்கிறது. அதே போல இ-கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை கடந்த 2022-ல் 2,649 யூனிட்ஸ்களாக இருந்த நிலையில் ஆண்டு அடிப்படையில் சுமார் 114.16 சதவீதம் அதிகரித்து 5,673 யூனிட்ஸ்களாக இருந்தது.
இதற்கிடையே 19-வது EV EXPO 2023-ல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்காலத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என்றார். அமைச்சரின் கூற்றுப்படி, இந்த பிரிவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் ஐந்து கோடி வேலை வாய்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி Vahan தரவுத்தளத்தின்படி, இந்தியாவில் ஏற்கனவே 34.54 லட்சம் EV-க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் தரவையும் Vahan கொண்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ளசுற்றுசூழலை மாசுபடுத்தும் வாகனங்களை மறுசீரமைக்க (பழைய பாகங்களை மாற்ற) அரசு அனுமதித்துள்ளது. இந்த வாகனங்கள் ஹைபிரிட் மற்றும் முழு எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு மாநில அரசுகள் மானியம் வழங்கியுள்ளதோடு, ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளன. உத்தரபிரதேசத்தில் புதிய மின்சார வாகனங்களை வாங்குபவர்கள் அதற்கான ரெஜிஸ்ட்ரேஷன் தொகையை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.
ரெஜிஸ்ட்ரேஷன் தொகையை ஏற்கனவே டெபாசிட் செய்தவர்களுக்கும் கூட அந்த மாநில அரசு திருப்பி கொடுத்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் தவிர, எரிபொருள் விலை உயர்வு மற்றும் நுகர்வோர் மத்தியில் மின்சார வாகனங்கள் குறித்து அதிகரித்து வரும் புரிதல் மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல காரணங்களும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையின் ஏற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக உள்ளன.