90 வருட ரஞ்சி டிராபி வரலாற்றில் இமாலய சாதனை படைத்த ரயில்வே அணி..!
90 ஆண்டுகால ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்து ரயில்வே அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
எலைட் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ரயில்வே அணி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுராவை எதிர்கொண்டது. நான்கு நாள் போட்டியான இதில், திரிபுரா முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு சுருண்ட நிலையில், ரயில்வே அணி 105 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய திரிபுரா, 333 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், ரயில்வே அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மிகவும் கடினமான இலக்காக இருந்தாலும், ரயில்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரதம் சிங் 169 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடன் முகமது சைப்பும் சதமடித்து 106 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம், ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ரயில்வே அணி படைத்துள்ளது. இதற்கு முன்னர், சௌராஷ்டிரா 2019-20ல் உத்தரப் பிரதேசத்திற்கு எதிராக 372 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.