வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 7-ம் தேதி தொடங்குகிறது..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகேவுள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரர் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம், திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி ஆலயம், கல்குளம் நீலகண்டசாமி ஆலயம், மேலாங்கோடு காலகாலர் ஆலயம், திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம், திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் ஆலயங்களில் சென்று சிவநாமங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்கின்றனர். சைவ வகை உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.
பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தையை நாளில் காவி உடை தரித்து கையில் விசிறியுடன் கோபாலா, கோவிந்தா என்ற நாம கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தின் முதல் ஆலயமான திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ஆலயமாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பழங்காலங்களில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களும் ஓட்டமாகவே சென்றுள்ளனர்.
தற்போது காலமாற்றத்திற்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓட்டமாகவும் செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்கின்றனர். சிலர் இந்த ஓட்டத்தை ஒரு ஆன்மீக சுற்றுலாவாகவும் கருதி இதில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஆலய வளாகத்திலுள்ள குளத்தில் குளித்து விட்டு ஆலயங்களுக்குள் செல்ல வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பதும் ஐதீகம்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணர் ஆலயத்தில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.
திருநட்டாலம் ஆலயத்தில் சுவாமி சிவன், விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த ஆண்டு சிவராத்திரி தினம் வரும் 8-ம் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமாகவும் செல்லும் பக்தர்கள் 7-ம் தேதி பிற்பகலில் தொடங்கி வரும் 9-ம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் வரும் 8-ம் தேதி காலையில் தொடங்கி 9-ம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு திருக்கோவில்கள் நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மேலும் கோவில் திருவிழாக் குழுக்கள், இதர கோவில் அமைப்புகள் சார்பில் ஆலயங்களிலும், இதர இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பக்தர்களுக்கு இளைப்பாறுவதற்கான வசதியும், மோர், சுக்குநீர் மற்றும் கஞ்சி, பாயாசத்துடன் சாதம், உள்ளிட்ட உணவுகளும் இலவசமாக வழங்கப்படுன்றன.