தமிழ்ச் சமூகத்தின் அடையாளம்.. ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை: அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக கொடுத்த பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள யா.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆயி எனப்படும் பூரணம் அம்மாள். கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த இவருடைய கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் அவருடைய பணி பூரணம் அம்மாளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உதவியாளர் பணியை செய்துகொண்டு தனது ஒரேயொரு மகளான ஜனனியை வளர்த்து வந்திருக்கிறார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகள் ஜனனி உயிரிழந்துவிட்டார். உயிரிழக்கும்போது பாரம்பரிய நிலத்தை, கொடிக்குளம் அரசு பள்ளியை மேம்படுத்த தானமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்திருக்கிறார். எனவே ஆயி அம்மாள் ஜனனியின் நினைவாக அரசு பள்ளியை தரம் உயர்த்த ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி.
கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் வாரி வழங்குவது எப்போதும் நடப்பதுதான். அவர்கள் இப்படி வழங்குவதன் பின்னணியில் விளம்பர நோக்கம் இருக்கலாம். ஆனால் சாமானிய குடும்பத்தை சேர்ந்த பெண்மணி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும் நிலத்தை கொடையாக கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொடைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனை அறிந்து பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன், “நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடனையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் திரு. இராஜேந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார். இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும்.
நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்!
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு.