112 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத சாதனையை செய்த இந்திய அணி.. சாதித்த ரோஹித் படை
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 112 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடின. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 5 – 0 என கைப்பற்றும் என பலரும் கணித்த நிலையில், இங்கிலாந்து அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதனால், மொத்த தொடரையும் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. ஆனால், அடுத்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.
இதுவரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து விட்டு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா வென்றதில்லை. அந்த வகையில் இந்தியா அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த மாதிரியான டெஸ்ட் தொடர் வெற்றி மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.
1897/98 மற்றும் 1901/02ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோற்று விட்டு, பின் நான்கு போட்டிகளையும் வென்று 4 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் 1911/12இல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே போன்ற சாதனையை செய்தது. அதன் பின் கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு அரிய நிகழ்வு நடைபெறவில்லை. 112 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இந்த சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
இத்தனைக்கும் இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, முகமது ஷமி இடம் பெறவில்லை. கே எல் ராகுல் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். ஜடேஜா, பும்ரா தலா ஒரு போட்டியில் ஆடவில்லை. அஸ்வின் தொடரில் ஒரு இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம் அவுட் ஆகி இரண்டு போட்டிகளுடன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்னும் அணிக்கு திரும்பாததால் இரண்டு விக்கெட் கீப்பர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தி இருந்தது இந்திய அணி.
இப்படி பல்வேறு அசௌகரியங்களுக்கு நடுவே அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்து கொண்டு ரோஹித் சர்மா, பும்ரா, அஸ்வின், ஜடேஜா என நான்கு அனுபவ வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியா இந்த தொடரை 4 – 1 என வென்று இருக்கிறது.