இந்திய அணி வேலையை காட்டிட்டாங்க.. ராஞ்சி பிட்சை போல் பார்த்ததே கிடையாது.. குமுறும் பென் ஸ்டோக்ஸ்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் ராஞ்சி பிட்சை போல் இதுவரை எங்குமே பார்த்ததில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியால் விளையாடப்பட்டு வரும் பேஸ் பால் அணுகுமுறைக்கு இந்திய மண்ணில் சவால் அளிக்கப்பட்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி தரமான கம்பேக்கை கொடுத்தது. அதிலும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் அந்நாட்டு பத்திரிகைகளாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ஸ்டைல், ஸ்பின்னர்களின் தரம், பேட்ஸ்மேன்களின் சொதப்பல் என்று அனைத்தும் இங்கிலாந்து முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராஞ்சி மைதானத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ராஞ்சி மைதானத்தின் பிட்சை நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், ராஞ்சி பிட்சை போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே பார்த்தது கிடையாது. என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இந்தியாவில் எங்குமே வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான பிட்சை பார்த்ததே இல்லை. ஆனால் இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் சுழலுக்கு சாதகமானதாக உள்ளது. கிரிக்கெட் என்பது விளையாட்டு தான். அதனால் நாம் வெற்றிபெறும் போது பலரும் நம்மை பாராட்டுவார்கள். அதேபோல் தோல்வியின் போது விமர்சனங்களும் வரும். அது விளையாட்டின் ஒரு அங்கமாக பார்க்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாக இதனை தெரிந்து கொண்டுள்ளேன். கடந்த வாரத்தில் அடைந்ததை போல் மிகப்பெரிய தோல்விகள் நிச்சயம் அணிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அடுத்த போட்டி எங்களுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும். நிச்சயம் எங்களின் ஆட்டத்தில் எந்த மாறுப்பாடும் இருக்க போவதில்லை. பேஸ் பால் பாணியில் தான் விளையாடுவோம். ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *