19 வயது பெண் மீது பழியை தூக்கிப் போட்ட இந்திய மகளிரணி கேப்டன்.. முன்னாள் வீரர் கடும் விமர்சனம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிடம் இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது. அந்த தோல்வி குறித்து பேசும் போது அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டில் வீசிய 19வது ஓவர் குறித்து பேசி இருந்தார்.
இதை அடுத்து 19 வயது இளம் வீராங்கனைகள் தான் தோல்விக்கான காரணம் எனப் பழியை அவர்கள் மீது போடுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் குறித்து விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் டோடா கணேஷ்.
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் டி20 தொடரில் ஆடி வருகின்றன. முதல் டி20 போட்டியில் இந்தியா வென்றது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது.
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்ரேயங்கா பாட்டில் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஆஸ்திரேலியாவின் போப் லிட்ச்பீல்டு இரண்டு போர், எல்லிஸ் பெர்ரி ஒரு சிக்ஸ் அடித்தனர். ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து போட்டி முடிந்த உடன் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், நாங்கள் போதிய ரன்கள் அடித்து இருந்தோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 19வது ஓவரில் ஸ்ரேயங்கா பாட்டில் சரியான இடத்தில் பந்து வீசி இருந்தால் நாங்கள் இப்போது வேறு நிலைமையில் இருந்திருப்போம் என்றார்.
இந்த நிலையில் டோடா கணேஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் எப்போதும் 19 வயது வீராங்கனைகளை தோல்விக்கு பலிகடா ஆக்கி வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அவரது பதிவில், “இன்னும் 19 வயது சிறுமி மீது பழி போடும் பழக்கம் போகவில்லை” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.