என் மனைவி பரிசாக கொடுத்த நகை அது… துப்பாக்கியைக் காட்டியும் கொடுக்க மறுத்த சுவிஸ் நாட்டவர்
திருடர்கள் இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நிலையிலும், தான் அணிந்திருந்த செயின், தன் மனைவி தனக்கு பரிசாகக் கொடுத்தது என்பதால், அதைக் கொடுக்க மறுத்தார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.
கட்சிக் கூட்டத்துக்கு சென்று திரும்பிய நபர்கள்
ஜெனீவாவில், கட்சிக் கூட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் முதியவர் ஒருவர். அப்போது அவரை வழிமறித்த திருடர்கள் இருவர், துப்பாக்கியைக் காட்டி அவரிடம் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்கள்.
அவர்கள் அவருடைய பர்ஸ் மற்றும் கைக்கடிகாரத்தைப் பறித்ததுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறிக்க முயன்றுள்ளார்கள்.
ஆனால், அது தன் மனைவி தனக்கு பரிசாகக் கொடுத்த செயின் என்று கூறி அதைக் கொடுக்க மறுத்துவிட்டார் அவர்.
உதவி கோரி அழைத்த நபர்
நடந்ததைக் கண்ட மற்றொருவர் உதவி கோரி சத்தமிட, திருடர்கள் துப்பாக்கியை அவர் பக்கம் திருப்பியுள்ளார்கள். இருவரும் சேர்ந்து அவரையும் அடித்து நொறுக்கிவிட்டு, அவரது பர்ஸ் மற்றும் கைக்கடிகாரத்தையும் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்கள்.
இத்தனைக்கும் அவர் உள்ளூர் கட்சித் தலைவராக இருப்பவர் ஆவார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த திருடர்கள் உள்ளூர்காரர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது.